Published : 25 Sep 2023 06:00 AM
Last Updated : 25 Sep 2023 06:00 AM

சென்னை, புறநகர் பகுதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு விநாயகர் சிலைகள் கடலில் கரைப்பு

வட சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் கடலுக்கு ஊர்வலமாக கொண்டு வரப்படும் சிலைகள்.

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு நேற்று கடலில் கரைக்கப்பட்டன. விநாயகர் சிலை கரைப்பை நேரில் பார்க்க மெரினா கடற்கரையில் நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர்.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த18-ம் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழகம் முழுவதும் 1.5லட்சம் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது. சென்னையில் மட்டும் 5 ஆயிரம் சிலைகள் வைக்கப்பட்டன.

தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகளை 24-ம் தேதி வரை நீர்நிலைகளில் கரைப்பதற்கு போலீஸார் அனுமதி வழங்கி இருந்தனர். இதனால், கடந்த 6 நாட்களாக பல்வேறு பகுதிகளில் போலீஸ் பாதுகாப்புடன் விநாயகர் சிலைகள் ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு கடல், குளங்கள், ஏரிகளில் கரைக்கப்பட்டு வந்தன.

சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் ராட்சத கிரேன் உதவியுடன்
விநாயகர் சிலைகள் நேற்று கடலில் கரைக்கப்பட்டன.

சென்னையிலும் கடந்த சில நாட்களாகக் குறைந்த எண்ணிக்கையிலான விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வந்தன. கடைசி நாளான நேற்று சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் 2 ஆயிரம் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

அந்த வகையில் சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை பின்புறம் உள்ளிட்ட 4 இடங்களில் ஏராளமான விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட சிலைகளை 17 வழித்தடங்களிலும், தாம்பரம் பகுதிக்கு உட்பட்ட சிலைகளை 4 வழித்தடங்களிலும், ஆவடி பகுதியில் உள்ள சிலைகளை 5 வழித்தடங்களிலும் என 26 வழித்தடங்களில் நேற்று காலை 9 மணி முதல் கடற்கரைக்கு கொண்டு சென்றனர்.

இந்து முன்னணி, இந்து மக்கள்கட்சி உட்பட பல்வேறு இந்து அமைப்பினர், பொதுமக்கள் வாகனங்களில் விநாயகர் சிலைகளை ஏற்றிக்கொண்டு பட்டாசுகள் வெடித்தும், மேளதாளத்துடன் ஊர்வலமாக கடற்கரைக்கு கொண்டு சென்றனர்.

சென்னையில் பல்வேறு முக்கியஇடங்களில் போலீஸார், வாகனங்களில் சிலைகளுடன் வருபவர்களை சோதனை செய்து, பின்னர்அனுமதித்தனர். மேலும், சில இடங்களில் ஊர்வலமாக விநாயகர் சிலைகளைக் கொண்டு வருபவர்களுடன் போலீஸாரும் பாதுகாப்புக்காக உடன் வந்தனர்.

சென்னையில் சிலை கரைக்கப்படும் 4 இடங்கள், ஊர்வலம் செல்லும் வழித்தடங்கள் என அனைத்துபகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் மூலம் போலீஸார் கண்காணித்தனர். சிசிடிவி இல்லாத இடங்களில் நடமாடும் கேமராக்கள் மூலம் போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அதேபோல், சாலைகளில் நீண்டவரிசைகள் விநாயகர் சிலைகள் அணிவகுத்து நிற்பதை ட்ரோன்களை பறக்கவிட்டு, கண்காணித்தனர். திருவல்லிக்கேணி, திருவெட்டீஸ்வரன்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

படங்கள்: எஸ்.சத்தியசீலன்

இதேபோல், தீவுத்திடல் முத்துசாமி பாலம் அருகிலும், வள்ளுவர் கோட்டத்திலும் இந்து முன்னணி முக்கிய நிர்வாகிகள் விநாயகர் சிலை ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தனர். தொடர்ந்து, இந்து முன்னணி சார்பில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரையில் விநாயகர் சதுர்த்தி விசர்ஜன விழா, இந்துஎழுச்சி பெருவிழா நடைபெற்றது. விநாயகர் சிலை ஊர்வலத்தையொட்டி, திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் பகுதியில் ஆயிரக்கணக்கான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விடுமுறை நாளான நேற்று விநாயகர் சிலை கரைப்பை நேரில் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் மெரினா உள்ளிட்ட கடற்கரைகளில் திரண்டனர். இரவு 11 மணி வரையில் விநாயகர் சிலைகளை பொதுமக்கள் கடலில் கரைத்து வந்தனர். விநாயகர் சிலை ஊர்வலத்தால், சென்னையில் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x