Published : 25 Sep 2023 06:28 AM
Last Updated : 25 Sep 2023 06:28 AM
சென்னை: கர்நாடக மாநிலத்தில் நாளை நடைபெறும் முழு அடைப்புப் போராட்டத்துக்கு மத்திய அரசு தடை விதிக்கும் வகையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கப் பொதுச் செயலர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்றுகூறியதாவது: காவிரி டெல்டாவில்5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, தண்ணீர்பற்றாக்குறையால் 3.50 லட்சம்ஏக்கரில் கருகத் தொடங்கிவிட்டது. சுமார் 15 லட்சம் ஏக்கரில்சம்பா சாகுபடி தொடங்க முடியாமல் தடைபட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மனமுடைந்து, கண்ணீர் விட்டுக் கதறுகிறார்கள்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை ஆணையம் குறுவைப் பயிரைக் காப்பாற்ற விநாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம், 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்குமாறு உத்தரவிட்டுள்ளது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தொடர்ந்த வழக்கு நிராகரிக்கப்பட்டு, உடனடியாக தண்ணீரை விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கூடாது என வலியுறுத்தி கர்நாடக மாநிலத்தில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணான வகையிலும், அதை அவமதிக்கும் நோக்குடனும் இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கர்நாடக மாநில பாஜக தலைவர்கள் பசவராஜ் பொம்மை தலைமையில், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி, கலவரத்தை தூண்டுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வரும் 26-ம் தேதி கர்நாடகா மாநிலம் முழுமையிலும் முழுஅடைப்புப் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் மற்றும் பல்வேறு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதன் பின்புலமாக அந்த மாநில அரசு செயல்படுவதாக வெளிவந்திருக்கும் செய்தி, பெரிதும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்த விவகாரத்தில் தமிழக முதல்வர் மவுனம் காப்பது, காவிரிடெல்டா விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் மட்டுமின்றி, கர்நாடகாவில் வாழும் தமிழர்களுக்கும் செய்யும் துரோகமாகும்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாக கர்நாடக மாநிலத்தில் முழுஅடைப்புப் போராட்டம் நடத்துவதை அம்மாநில அரசு வேடிக்கைப் பார்ப்பது சட்ட விரோதம் என்பதை மத்திய அரசிடம் தமிழக முதல்வர் ஸ்டாலின் எடுத்துரைத்து, முழு அடைப்புப் போராட்டத்துக்கு தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் கர்நாடகாவில் மிகப் பெரும் கலவரம்ஏற்பட்டு, தமிழர்களின் சொத்துக்கும், உயிருக்கும் பெரும் ஆபத்து ஏற்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT