Published : 25 Sep 2023 04:04 AM
Last Updated : 25 Sep 2023 04:04 AM
மயிலாடுதுறை: ஐபிஎஸ் படித்த, நன்றாக உழைக்கின்ற இளைஞரான அண்ணாமலைக்கு ஏற்ற இயக்கம் பாஜக அல்ல என மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரியில் தமிழகத்துக்குரிய தண்ணீரை வழங்காமல் கர்நாடகா அரசு வஞ்சிக்கிறது. எங்கள் கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிதான் கர்நாடகாவில் ஆட்சியில் உள்ளதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டு கின்றனர்.
ஆனால், பாஜக அங்கு ஆட்சியில் இருந்த போதும், தமிழகத்துக்கு சுமுகமாக தண்ணீர்வழங்கவில்லை. கர்நாடகாவில்அதிக மழைப் பொழிவு இருக்கும்போது வடிகாலாகத்தான் தமிழகத்தை கர்நாடகா பயன்படுத்துகிறது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்துக்குச் சென்று அழுத்தம் கொடுத்ததால் தான் தற்போது தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகாவில் பாஜகவினர்தான் போராட்டம் நடத்துகின்றனர். ஐ.பி.எஸ் படித்த, நன்றாக உழைக்கின்ற இளைஞரான அண்ணாமலை, வலதுசாரி சிந்தனை உள்ள பாஜகவில் சேர்ந்தது, அறிஞர் அண்ணா குறித்து அவர் அண்மையில் பேசியது போன்றவையெல்லாம் ஏமாற்றம் அளிக்கிறது.
அண்ணாமலைக்கு ஏற்ற இயக்கம் பாஜக அல்ல. சனாதனம், இந்து மதம் ஆகிய இரண்டும் வெவ்வேறானவை. சனாதனத்தில் உள்ள கோட்பாடுகளைத் தான் எதிர்க்கிறோமே தவிர, இந்து மதத்தைப் பின்பற்றுபவர்களுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT