Published : 25 Sep 2023 04:02 AM
Last Updated : 25 Sep 2023 04:02 AM
வேலூர் / திருப்பத்தூர்: வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் விடிய, விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளில் மழை நீர் புகுந்தது. வேலூர் மாவட்டத்தில் அதிகபட்சம் அணைக்கட்டில் 79 மி.மீ., மழையும், திருப்பத்தூர் மாவட்டத்தில் வட புதுப்பட்டு பகுதியில் 78.60 மி.மீ., மழையளவும் பதிவானது.
பருவமழை காரணமாக வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் (சனிக்கிழமை) பிற்பகல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், மாலை 4 மணியளவில் வேலூரில் சில இடங்களில் சாரல் மழை பெய்ததை தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழை கொட்டியது.
சுமார் 1 மணி நேரத்துக்கும் மேல் மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து இரவு தொடங்கி விடியும் வரை சாரல் மழையாகவும், பலத்த மழையாகவும் இடி, மின்னலுடன் மாறிமாறி பெய்தது. இதனால் வேலூர் கிரீன்சர்க்கிள், தெற்கு காவல் நிலையம், கஸ்பா, உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் மழைநீர் சாலைகளில் குளம்போல் தேங்கியது.
தொடர் மழை காரணமாக சத்துவாச்சாரி அடுத்த வசந்தம் நகர் முதல் தெருவில் வீடு களுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அவர்கள் மிகவும் சிரமத் துக்குள்ளாகினர். மழை நீர் தடையின்றி வெளியேற அந்த தெருவில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டினர்.
பாதாள சாக்கடை திட்டப்பணிக்காக தோண்டப்பட்ட சாலைகள் சீரமைக்கபடாததால் மண் சாலை முழுவதும் சேறும், சகதியுமாக மாறி வசந்தம் நகர் விரிவு, ஜெயலட்சுமி கார்டன் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவித்தனர். அதேபோல, வசந்தம் நகர் பகுதியில் வீடுகளில் மழைநீர் தேங்கியதால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதுடன்,
இரவு முழுவதும் அங்கு மின் நிறுத்தம் ஏற்பட்டதால் பொதுமக்கள் உறக்க மின்றி தவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி வசந்தம் நகர் தெருக்களில் தேங்கிய மழைநீரை மாநகராட்சி ஊழி யர்கள் மின்மோட்டார் மூலம் நேற்று அகற்றினர். மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு நடத்தினர்.
அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணி யம்பாடி, நாட்றாம்பள்ளி, திருப் பத்தூர் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை தொடங்கி இரவு வரை விடிய, விடிய கனமழை கொட்டியது. இதனால், ஆம்பூர், வாணியம்பாடி நகராட்சி பகுதிகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. வேலூர் மாவட்டத்தில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக அணைக்கட்டில் 79 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
குடியாத்தம் 31 மி.மீ., மேல் ஆலத்தூர் 57.60, மோர்தானா அணை 15, கே.வி.குப்பம் 60, ராஜாதோப்பு அணை 64, காட்பாடி 32, சர்க்கரை ஆலை 33.60, பொன்னை 12.80, வேலூர் ஆட்சியர் அலுவலகம் 52.70, வேலூர் வட்டாட்சியர் அலுவலகம் 27.40, பேர்ணாம்பட்டு 18.60 என மொத்தம் 483.70 மி.மீ மழையும், சராசரியாக 53.74 மி.மீ., மழையும் பதிவாகியுள்ளது.
அதேபோல, திருப்பத்தூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக வட புதுப்பட்டு பகுதியில் 78.60 மி.மீ., மழை பதிவாகியிருந்தது. ஆம்பூர் 52, ஆலங்காயம் 11, வாணியம்பாடி 16, நாட்றாம்பள்ளி 35, கேத் தாண்டப்பட்டி 5, திருப்பத்தூர் 38.60, என சராசரியாக 33.74 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT