

சென்னை: எந்த ஆவணங்களும் இல்லாமல் தரிசு நிலங்களை தனி நபர்களின் பெயர்களுக்கு பட்டா போட்டு கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் வரும் செப்.26-ம் தேதி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலூர் மாவட்டம் சிலம்பநாதன்பேட்டை ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 186 ஏக்கர் தரிசு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அரசின் ஒப்புதல் பெறாமல் நஞ்சை நிலமாக வகை மாற்றம் செய்து எந்த ஆவணங்களும் இல்லாமல், தனி நபர்களின் பெயர்களுக்கு பட்டா போட்டு கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறி சிலம்பநாதன்பேட்டை ஊராட்சி மன்றத் தலைவர் தெய்வானை சிங்காரவேலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், முறைகேடாக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த பட்டாக்களை ரத்து செய்து, இதுதொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிஇருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.எம்.சுப்ரமணியம், மனுதாரர் கூறும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்பதால், அந்த நிலத்தின் தற்போதைய நிலை குறித்து நில நிர்வாக ஆணையர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
மேலும், முறைகேடாக பட்டா வழங்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கடலூர் வருவாய் கோட்டாட்சியர் செப்.26-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.