Published : 24 Sep 2023 06:52 AM
Last Updated : 24 Sep 2023 06:52 AM
மதுரை: திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றபோது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த பொறியியல் பட்டதாரி குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையை சேர்ந்த சுவாமிஜி என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு: என் மகன் அங்கப்பன் என்ற விக்னேஷ். பி.இ. பட்டதாரியான இவர், கடந்த 14.5.2014-ல் கிரிவலம் செல்வதற்காக நண்பர்களுடன் திருவண்ணாமலை சென்றார். இரவில் கிரிவலம் சென்றபோது, சாலை ஓரத்தில் கட்டப்பட்டிருந்த பிளக்ஸ் போர்டு சரிந்து அவர்கள் மீது விழுந்துள்ளது. இதில் என் மகன் காயமடைந்தார். அவருக்கு அங்குள்ள மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
மருந்துவ முகாம் நடைபெற்ற கூடாரத்தின் கம்பியை அவர் பிடித்துள்ளார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் என் மகன் உயிரிழந்தார். எனவே, எனக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: பிளக்ஸ் போர்டு விழுந்து காயமடைந்த மனுதாரர் மகனுக்கு மருத்துவ முகாமில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அங்கு மின்சாரம் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.
திருவண்ணாமலை புனித இடம். இங்கு ரமண மகரிஷி, சேஷாத்திரி சுவாமிகள், யோகிராம் சுரத்குமார் ஆகியோர் வசித்துள்ளனர். ஒவ்வொரு பவுர்ணமியின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்ல திருவண்ணமாலை வருகின்றனர். மற்ற நாட்களிலும் கோயிலுக்கும், ஆசிரமங்களுக்கும் பக்தர்கள் வருகின்றனர்.
பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டியது உள்ளாட்சி அமைப்புகளின் கடமையாகும். துரதிர்ஷ்டவசமான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கும் வகையில், அதிகாரிகள் உரிய ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும். மருத்துவ முகாமில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.
இங்கு மருத்துவ முகாம் ஒருவரின் உயிரை காப்பாற்றுவதற்கு பதிலாக, உயிரிழப்புக்கு காரணமாக அமைந்துள்ளது. மின்சார வயர்கள் சரியாக அமைக்கப்படாததால் மின் கசிவு ஏற்பட்டு மனுதாரரின் மகன் உயிரிழந்துள்ளார். ஒட்டுமொத்த சம்பவத்துக்கும் மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்பும்தான் காரணம். எனவே, மாவட்ட நிர்வாகமும், உள்ளாட்சி அமைப்பும் மனுதாரருக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.
மனுதாரரின் மகன் பிரபலமான பொறியியல் கல்லூரியில் படித்துள்ளார். பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 573 மதிப்பெண்ணும், 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 1,145 மதிப்பெண்ணும் பெற்றுள்ளார். பொறியியல் படிப்பிலும் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளார். அவர் உயிருடன் இருந்திருந்தால் நல்ல எதிர்காலம் இருந்திருக்கும். இதனால் மனுதாரருக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலாளர் 4 வாரத்தில் ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். இழப்பீடு வழங்க தாமதம் ஏற்பட்டால் அதற்கு 6 சதவீத வட்டியும் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT