Published : 15 Dec 2017 08:48 AM
Last Updated : 15 Dec 2017 08:48 AM

முதல்வர் வாக்கு சேகரிக்க வந்ததால் முடங்கிய பாஜக தேர்தல் பிரச்சாரம்: தமிழிசை சவுந்தரராஜன் வேதனை

ஆர்.கே.நகர் தொகுதியில் நேற்று தமிழக முதல்வர் கே. பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதால், பாஜகவினர் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடியாமல் முடங்கினர்.

பாஜக வேட்பாளர் கரு.நாகராஜனுக்கு ஆதரவாக தண்டையார்பேட்டை காலரா மருத்துவமனை சந்திப்பில் பிரச்சாரம் செய்ய நேற்று மாலை 5 மணிக்கு கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதற்காக ஏராளமான பாஜகவினர் அந்த இடத்துக்கு வந்தனர். அதே நேரத்தில் தமிழக முதல்வர் கே.பழனிச்சாமி அதிமுக வேட்பாளர் மதுசூதனனுக்கு ஆதரவாக வாக்கு கேட்டு அதே இடத்தில் பிரச்சாரம் செய்ய வருவதாக கூறி பாஜகவினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இதையடுத்து பாஜகவினர் அருகில் இருந்த ஒரு திருமண மண்டபத்தில் அமர்ந்தனர். பின்னர் சிறிது நேரம் கழித்து கும்மாளம்மன் கோயில் ஜீவரத்தினம் சாலை சந்திப்புக்குச் சென்று பிரச்சாரம் செய்ய பாஜகவினர் சென்றனர். அங்கும் போலீஸார் அனுமதி தரவில்லை. அங்கு நீண்ட நேரம் காத்திருந்த தமிழிசை சவுந்தரராஜனை கட்சியினர் அருகில் இருந்த டீ கடைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கட்சியினருடன் தமிழிசை டீ குடித்தார். பின்னர் கட்சிக்காரர்களுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.

ஆனால் இரவு 7 மணி வரை அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக முதல்வர் பழனிச்சாமி கும்மாளம்மன்தெரு, ஒய்எம்சிஏ குப்பம், விநாயகபுரம், பெரிய பாளையத்தெரு பகுதியில் நீண்டநேரம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். இதனால் பாஜகவினர் பொறுமை இழந்தனர்.

அப்போது தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்.கே. நகர் தொகுதிக்குள் எங்களை போன்றவர்களுக்கு பிரச்சாரம் செய்ய உரிய அனுமதி கிடைக்கவில்லை. அதற்கான நேரத்தை ஒதுக்கி தரவில்லை. ஆளுங்கட்சிக்கு அதிகாரிகள் துணை போகின்றனர். தேர்தல் ஆணையம் இன்னும் அதிகளவு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். பணம் அதிகமாக புழங்குவதாக தெரிகிறது. அதேபோல் குக்கர்தான் அதிகம் பிடிபடுகிறது. அதனை விசாரணைக்கு பிறகு விட்டுவிடுகின்றனர். தேர்தல் ஆணையம் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

ஆளுங்கட்சியினர் தங்களுக்கு வேண்டியவர்களை வாக்காளர் பட்டியிலில் சேர்த்தும், வேண்டாதவர்களை நீக்கியும் உள்ளனர். இதில் தேர்தல் ஆணையம் எச்சரிக்கையுடன் நடந்திருக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x