

கோவை: கோவை ஈஷா யோக மைய வளாகத்தில் ஆதியோகி சிலை முன்பு ‘ஈஷா கிராமோத்சவம்’ திருவிழாவின் இறுதிப் போட்டிகள் நேற்று நடந்தன.
தென்னிந்திய அளவிலான வாலிபால் போட்டியில் சேலம் உத்தம சோழபுரம் அணி, பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் புள்ளா கவுண்டன் புதூர் அணி, தமிழ்நாடு அளவில் நடந்த கபடி போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஈரோடு அணிகள் சாம்பியன் பட்டம் பெற்றன. வெற்றி பெற்ற அணி வீரர்களுக்கு ஈஷா நிறுவனர் சத்குரு, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் உள்ளிட்டோர் பரிசு தொகை, பாராட்டு கேடயங்கள் வழங்கினர்.
விழாவில் மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் பேசும்போது, ‘‘இப்போட்டிகளில் தினக்கூலி வேலைக்கு செல்பர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், விவசாயிகள் என பலவிதமான வேலை செய்பவர்கள்தான் வீரர்களாக பங்கேற்று வென்றுள்ளனர். இதுதான் இத்திருவிழாவின் சிறப்பு. வாழ்க்கையையே ஒரு விளையாட்டு தன்மையுடன் அணுகக்கூடிய ‘கூல்’ குருவாக சத்குரு இருக்கிறார்.
விளையாட்டுப் போட்டிகள் மற்றும் கலைகளை வளர்க்கும் வித்தையை அவரிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம். நடப்பாண்டு 1,000 இடங்களில் கேலோ இந்தியா விளையாட்டு மையங்கள் தொடங்கப்பட உள்ளன. யோகா, களரி, மல்லர்கம்பம் உள்ளிட்ட 5 பாரம்பரிய கலைகளை கேலோ இந்தியா திட்டத்தில் சேர்த்துள்ளோம். பாரம்பரிய விளையாட்டான கபடி போட்டியை ஒலிம்பிக்கில் சேர்க்கும் காலமும் கூடிய விரைவில் வரும்” என்றார்.
ஈஷா நிறுவனர் சத்குரு பேசும்போது, ‘‘ஈஷா கிராமோத்சவம் திருவிழாவில் 25,000 கிராமங்களில் இருந்து 60,000 வீரர்கள் பங்கேற்றனர். வாழ்க்கையில் விளையாட்டுத் தன்மை இல்லாமல் போனால், வாழ்க்கை பெரும் சுமையாகிவிடும்” என்றார். இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் வீரர் தன்ராஜ் பிள்ளை, திரைப்பட நடிகர் சந்தானம் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.