Published : 24 Sep 2023 04:14 AM
Last Updated : 24 Sep 2023 04:14 AM
சேலம்: சேலத்தில், 2 ஆண்டுகளுக்குப் பின்னர் வரும் அக்டோபர் 16-ம் தேதி முதல் விமான சேவை தொடங்குகிறது.
சேலத்தை அடுத்த ஓமலூர் அருகே காமலாபுரத்தில் விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து சென்னைக்கு ‘ட்ரூ ஜெட்’ நிறுவனம் சார்பில் இயக்கப்பட்டு வந்த விமான சேவை, கரோனா தொற்றுப் பரவலின் போது, 2021 ஜூனில் நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் விமான சேவை தொடங்கப்படவில்லை.
இந்நிலையில், சேலம் விமான நிலைய ஆலோசனைக் கூட்டத்தின்போது, ‘சேலத்தில் மீண்டும் விமான சேவையை தொடங்க விமானப் போக்குவரத்து அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தப்பட்டது. இத்தகு சூழலில், ‘வரும் அக்டோபர் 16-ம் தேதி முதல் சேலத்திலிருந்து மீண்டும் விமான சேவை தொடங்கும்’ என தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து சேலம் விமான நிலைய இயக்குநர் ரமேஷ் கூறியது: ‘உடான்- 5’ திட்டத்தின் கீழ் சேலத்திலிருந்து அக்டோபர் மாதம் முதல் விமான சேவை தொடங்க 2 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதில், அக்டோபர்16-ம் தேதி முதல் அலையன்ஸ் நிறுவனம் சார்பில் பெங்களூரு - சேலம்- கொச்சி வழித்தடத்தில் விமான சேவை தொடங்கப்படுகிறது.
இதேபோல, கொச்சியில் இருந்து சேலம் வழியாக பெங்களூருவுக்கு விமானம் இயக்கப்படுகிறது. வாரத்தில் புதன் மற்றும் வெள்ளிக்கிழமை தவிர மற்ற 5 நாட்களிலும் விமான சேவை நடைபெறும். இண்டிகோ நிறுவனம் சார்பில் அக்டோபர் மாத இறுதியில், பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக, ஹைதராபாத்துக்கு விமானம் இயக்கப்பட உள்ளது.
இந்த விமானம் ஹைதராபாத் சென்றுவிட்டு, மீண்டும் சேலம் வழியாக பெங்களூரு சென்றடையும். 2 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் விமான சேவை தொடங்கினாலும், விமானப் போக்குவரத்துக்காக எப்போதும் சேலம் விமான நிலையம் தயார் நிலையில் உள்ளது. விமான நிலையத்தில் 2 விமானங்களை நிறுத்தும் வசதி இருந்தது.
தற்போது ஒரே நேரத்தில் 4 விமானங்களை நிறுத்தும் அளவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலத்திலிருந்து சென்னைக்கு விமான சேவை தொடங்குவதற்கும் தொடர்ந்து பேசி வருகிறோம், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT