Published : 24 Sep 2023 04:00 AM
Last Updated : 24 Sep 2023 04:00 AM
சென்னை: இந்திய கலங்கரை விளக்கதினத்தை முன்னிட்டு, துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு சென்னை மெரினா கடற்கரையில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் இந்திய கலங்கரை விளக்க ஆணையரகத்தின் துணை இயக்குநர் ஜெனரல் வெங்கட்ராமன் பங்கேற்று, சென்னையில் நடைபெறும் கலங்கரை விளக்க திருவிழாவுக்கு முன்பதிவு செய்வதற்கான விளம்பர பலகையை திறந்து வைத்தார்.
அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கலங்கரை விளக்க தினம் ஆண்டுதோறும் செப்.25-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டில் கலங்கரை விளக்க தினத்தை, கலங்கரை விளக்க திருவிழாவாக செப்.23 முதல் 25-ம் தேதி வரை கொண்டாட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
அதன்படி, திருவிழாவின் தொடக்க விழா மத்திய துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத் துறை அமைச்சர் சர்பானந்தா சோனோவால் மூலம் கோவாவில் நேற்று (செப்.23) தொடங்கி வைக்கப்பட்டது.
இதன் நிறைவு விழா சென்னையில் கலங்கரை விளக்கம் மற்றும் விளக்கு கலங்கள் இயக்குநர் ஜெனரல் என்.முருகானந்தம் அறிவுறுத்தலின் படி நாளை (செப்.25) மாலை 6 மணிக்கு, மயிலாப்பூரில் உள்ள செயின்ட் பீட்ஸ் உயர்நிலைப் பள்ளி அரங்கில் நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் பிரபல பாடகர் ஸ்ரீ ஹரிஹரனின் இசைக் கச்சேரியும் நடைபெறுகிறது.
இதற்கான முன்பதிவு செப்.23மாலை 4 மணி முதல் தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவில் இலவசமாக முதல் ஆயிரம் பேருக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும்.
எனவே விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் www.takkarustudio.com என்ற இணையதளத்தின் வாயிலாகவும், சென்னையில் மியூசிக் அகாடமி, வி.ஆர்.மால், கலங்கரை விளக்கம் மற்றும் மெரினா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பலகைகளில் இருக்கும் க்யூ - ஆர் கோடுகளை ஸ்கேன் செய்தும் முன்பதிவு செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்வில் சென்னை கலங்கரை விளக்கம் மற்றும் விளக்கு கலங்கள் இயக்குநர் கார்த்திக் செஞ்சுடர், துணை இயக்குநர் சவுந்தர பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT