Published : 24 Sep 2023 04:00 AM
Last Updated : 24 Sep 2023 04:00 AM
சென்னை: சென்னையில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் 3 திட்டப் பகுதிகளில் ரூ.409 கோடியில் 2 ஆயிரத்து 364 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணிகளுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் புதுப்பேட்டை கொய்யாதோப்பு திட்டப் பகுதியில் ரூ.61.20 கோடியில் 324 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள், சேத்துப்பட்டு மீனாம்பாள் சிவராஜ் திட்டப் பகுதியில் ரூ.41.30கோடியில் 240 புதிய குடியிருப்புகள், கோட்டூர்புரம் திட்டப் பகுதியில் ரூ.307.24 கோடியில் 1800 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் என மொத்தம் 3 திட்டப் பகுதிகளில் ரூ.409 .74 கோடியில் 2 ஆயிரத்து 364 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில் அமைச்சர் உதயநிதி பங்கேற்று திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இப்புதிய குடியிருப்புகள் ஒரு பல்நோக்கு அறை, படுக்கைஅறை, சமையல் அறை மற்றும்கழிவறை ஆகிய வசதிகளுடன் கட்டப்படவுள்ளன. மேலும், அனைத்து குடியிருப்பு வளாகங்களும், சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவு நீரேற்று வசதி, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஆகியவசதிகளுடன் அமைக்கப்படவுள்ளன.
18 மாதங்களில் பணிகளைநிறைவு செய்து குடியிருப்புதாரர்களுக்கு வழங்கப்படும். இங்கு கட்டப்படும் குடியிருப்புகள் ஏற்கெனவே இருந்த குடியிருப்புதாரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மீதமுள்ள குடியிருப்புகள் பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு வழங்கப்பட உள்ளது.
மாநகராட்சியின் சார்பில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கே.பி பூங்கா திட்டப் பகுதியில் ரூ.1.31 கோடியில் அமைக்கப்பட்ட கால்பந்து விளையாட்டு மைதானத்தையும், எழும்பூர் சட்டப்பேரவை தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டப்பட்ட உடற் பயிற்சி கூடத்தையும் அமைச்சர் உதயநிதி திறந்து வைத்தார். சேத்துப்பட்டு மேயர் சத்தியமூர்த்தி சாலையில் அமைந்துள்ள நடுநிலைப் பள்ளியில் 39 ஸ்மார்ட் வகுப்பறைகளையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர் செல்வி அபூர்வா, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண் இயக்குநர் பொ.சங்கர், மாநகராட்சி துணை மேயர் மு.மகேஷ் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT