Published : 24 Sep 2023 04:04 AM
Last Updated : 24 Sep 2023 04:04 AM
சென்னை: விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்காதவர்களுக்கு, வரும் தேர்தலில் இந்து சமுதாய மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று இந்து முன்னணி அமைப்பின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறினார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: இந்து முன்னணி சார்பில் கடந்த 40 ஆண்டுகளாக விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்தி வருகிறோம். நடப்பாண்டு தமிழகத்தில் 1.50லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, விசர்ஜன விழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் செப். 24-ம் தேதி (இன்று) விநாயகர் விசர்ஜன ஊர்வலம் நடத்தப்படுகிறது.
அரசு அதிகாரிகளை ஏவிவிட்டு,விநாயகர் சதுர்த்தி விழாவைச் சீர்குலைக்க தமிழக அரசு முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக, பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது, பெண் காவலர்களைக் கொண்டு பெண்கள், சிறுவர்களைத் தாக்கியுள்ளனர்.
இதேபோல, நாகை, தென்காசி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விநாயகர் ஊர்வலம் நடத்தக் கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளனர். இந்துக்கள் ஒற்றுமையாக இருக்கக் கூடாது என்பதில் திமுக அரசு கவனமாக இருந்து வருகிறது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். ரம்ஜான், கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்லும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள், விநாயகர் சதுர்த்திக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.
அவர்களது கட்சி அலுவலகங்களில் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடவும் இல்லை. இஸ்லாமிய, கிறிஸ்துவப் பண்டிகைகளுக்கு ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கும் தமிழக அரசு, விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு மட்டும் அனுமதி கொடுக்க மறுப்பது ஏன்? விநாயகர் சதுர்த்தி விழாவின் நோக்கமே, அனைத்து சமுதாய மக்களையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பது தான்.
இந்தியாவின் பெயரை பாரதம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு இந்து முன்னணி ஆதரவளிக்கிறது. விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு வாழ்த்து தெரிவிக்காதவர்களுக்கு, வரும் தேர்தலில் இந்து சமுதாய மக்கள் பாடம் புகட்டுவார்கள். வரும் தேர்தலில் பெரிய மாற்றம் ஏற்படும். திமுக நிச்சயம் தோல்வியடையும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT