Published : 04 Jul 2014 11:05 AM
Last Updated : 04 Jul 2014 11:05 AM

கச்சத்தீவுக்கு படகு போக்குவரத்து தொடங்கப்படுமா?

கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்துக்குச் செல்லும் யாத்ரிகர்களின் வசதிக்காக ராமேசுவரத்திலிருந்து படகுப் போக்குவரத்தைத் தொடங்க சரியான தருணம் இது என்ற கருத்து வலுப்பெற்றுள்ளது.

1947-ல் ஜமீன்தார் முறை ஒழிப்புச் சட்டம் அமல்படுத்தப்படும் வரை ராமநாதபுரம் சேதுபதி மன்னர் களின் ஆட்சியின் கீழ் கச்சத் தீவு இருந்தது. பிறகு, இந்தி யாவின் கட்டுப்பாட்டில் இருந்த கச்சத்தீவு, 1974-ல் ஒப்பந் தம் மூலம் இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது.

285 ஏக்கரிலான கச்சத்தீவு, ராமேசுவரத்திலிருந்து 12 கடல் மைல் தொலைவிலும், இலங்கை நெடுந்தீவில் இருந்து 8 கடல் மைல் தொலைவிலும் ‘பாக்ஜலசந்தி’ கடற்பரப்பில் அமைந்துள்ளது. ராமேசுவரத்தி லிருந்து சுமார் இரண்டரை மணி நேரத்திலும், இலங்கையின் நெடுந் தீவு மற்றும் தலைமன்னாரில் இருந்து சுமார் ஒன்றரை மணி நேரத்திலும் கச்சத்தீவை அடைய லாம்.

கடலில் இயற்கைச் சீற்றம், பேராபத்து ஆகியவற்றிலிருந்து காப்பாற்றவும், பெருமளவு மீன் கிடைக்கவும் மீனவர்கள் வழிபாடு நடத்திய பின்னரே கடலுக்குள் செல்வது வழக்கம். இதற்காக சீனிக்குப்பன் படையாச்சி என்பவர் 1913-ம் ஆண்டில் கச்சத்தீவில் சிறிய ஓலைக் குடிசையில் புனித அந்தோணியார் ஆலயத்தை நிறுவினார்.

அன்றிலிருந்து இந்த தேவாலயத் தில் ஆண்டுதோறும் மார்ச் முதல் வாரத்தில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவில் தமிழகம் மற்றும் இலங்கையில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர் கள் பங்கேற்பர். சிறப்புத் திருப்பலி, தேர்பவனி நடைபெறும்.

இந்நிலையில், கச்சத்தீவு தேவா லயத்துக்கு படகு போக்குவரத்தை தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வருகிறது. இதுகுறித்து ராமநாதபுரம் சட்டப் பேரவை உறுப்பினர் ஜவாஹிருல்லா கூறியதாவது:

சென்னை உயர் நீதிமன்றத்தில் கச்சத்தீவு தொடர்பான வழக்கில், கடந்த செவ்வாய்க்கிழமை நடை பெற்ற விசாரணையின்போது கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலயத்தில் வழிபாடு செய்ய இந்தியர்களுக்கு உரிமை உள்ளது என்பதை மத்திய அரசு உறுதிபடுத்தியுள்ளது. ஆண்டு தோறும் மார்ச் மாதம் நடைபெறும் இந்த தேவாலய திருவிழாவில் தமிழகம், இலங்கையிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கின்றனர். படகு போக்கு வரத்து வசதி இருந்தால், கச்சத்தீவுக்கு பக்தர்களின் வருகை தினமும் இருக்கும். எனவே, தமிழக அரசு ராமேசுவரத்திலிருந்து கச்சத் தீவுக்கு தினசரி படகுப் போக்கு வரத்தைத் தொடங்க வேண்டும். அதற்கு, இதுவே சரியான தருணம். இதன்மூலம் கச்சத்தீவில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமையை நிலைநாட்ட முடியும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x