Published : 24 Sep 2023 04:12 AM
Last Updated : 24 Sep 2023 04:12 AM

மகளிர் இடஒதுக்கீடு மசோதா ஒரு கண்துடைப்பு நாடகம்: திருச்சி சிவா எம்.பி விமர்சனம்

திருச்சி சிவா எம்.பி. | கோப்புப் படம்

திருச்சி: திருச்சி தந்தை பெரியார் அரசு கலை- அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இன்று (செப்.24) நடைபெறுகிறது.

இதையொட்டி, கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகளை கல்லூரியின் முன்னாள் மாணவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான திருச்சி சிவா நேற்று பார்வையிட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஏழை, எளிய, கிராமப்புற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்காக பெரியார் தனது பணத்தையும், இடத்தையும் கொடுத்து தொடங்கிய கல்லூரி இது. இக்கல்லூரி இல்லையென்றால் எங்களில் பலருக்கு உயர் கல்வி கிடைத்திருக்காது.

ஆண்டுதோறும் செப்.17-ம் தேதி பெரியார் பிறந்த நாளில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழும். நிகழாண்டு சில காரணங்களால் நாளை (இன்று) நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் நாடாளுமன்றம், சட்டப்பேரவைகள் ஆகியவற்றில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

திமுக உட்பட அனைத்து கட்சிகளும் இதை ஆதரித்தன. இது, உடனடியாக நடைமுறைக்கு வராது. வழக்கமாக ஒரு சட்டத்தை இயற்றி, நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டு, அரசிதழில் பதிவானால்தான் அது நடைமுறைக்கு வரும். ஆனால், இந்த மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைப் பொறுத்தவரை,

மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி, தொகுதி வரையறை செய்த பிறகே இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறுகின்றனர். இது, அவ்வளவு எளிமையான வேலை அல்ல. ஏதோ கொக்குத்தலையில் வெண்ணெய் வைப்பதுபோல தெரிகிறது. இது, மத்திய பாஜக அரசின் கண்துடைப்பு நாடகம். தேர்தல் நெருங்குவதால் இதை அறிவித்துள்ளனர்.

மகளிருக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது பெயரளவில் மகிழ்ச்சியே தவிர, இப்போதைக்கு நடைமுறைக்கு வரவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது என்றார். மகளிருக்கு இட ஒதுக்கீடு கிடைத்தது பெயரளவில் மகிழ்ச்சியே தவிர, இப்போதைக்கு நடைமுறைக்கு வராத ஆதங்கம் இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x