Published : 19 Dec 2017 12:47 PM
Last Updated : 19 Dec 2017 12:47 PM

க.அன்பழகன் 96-வது பிறந்த நாள்: மு.க.ஸ்டாலின் நேரில் வாழ்த்து

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகனின் 96-வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது இல்லத்துக்கு நேரில் சென்று பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

பின்னர், மு.க.ஸ்டாலின், க.அன்பழகன், துரைமுருகன் உள்ளிட்ட திமுக தலைவர்கள் அண்ணா நினைவிடத்திற்கும், பெரியார் நினைவிடத்திற்கும் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

அன்பழகனின் பிறந்தநாளை முன்னிட்டு மு.க.ஸ்டாலின் அவரது முகநூல் பக்கத்தில் வாழ்த்து மடல் வெளியிட்டுள்ளார்:

திமுகவின் பொதுச்செயலாளராகவும், தலைவர் கருணாநிதியின் அரசியல் பயணத்தின் நெடுகிலும் உற்ற தோழராகவும், எந்தநிலையிலும் திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து இம்மியளவும் விலகாத உறுதி மிக்க மூத்த தலைவராகவும் விளங்குகிற அன்பழகனின் 96வது பிறந்தநாள் திமுகவின் பொன்னாள்.

பெரியார் - அண்ணா - கருணாநிதி ஆகியோரைத் தலைவர்களாக ஏற்று, திராவிட இயக்கம் வேரூன்றிப் பரவிட அயராது பாடுபட்டு வருபவர் அன்பழகன். திமுகவின் இளைஞரணி தொடங்கப்பட்டதிலிருந்து அதன் வளர்ச்சிக்கு உரமூட்டும் வகையில் எனக்கும் என்னுடன் இணைந்து இளைஞரணியில் பணியாற்றியோருக்கும் திராவிட இயக்க தத்துவங்களை உற்சாகத்துடன் போதித்தவர்.

திமுகவின் எதிர்கால வளர்ச்சியினைக் கருத்திற்கொண்டு, என்னை ஊக்கப்படுத்தி, உரிய அறிவுரை வழங்கி தொடர்ந்து வழிகாட்டி கொண்டிருப்பவர்.

பேராசிரியர் என்கிற சொல்லுக்கேற்ப திமுக எனும் பல்கலைக்கழகத்தில் இன்றைய இளைய தலைமுறைக்கும் இணையற்ற முறையில் கொள்கை வகுப்பெடுப்பவர்தான் நமது அன்பழகன் அவர்கள். பகுத்தறிவுச் சுடர் கொளுத்தி சனாதன இருட்டை விரட்டியடிக்கும் அவரது உறுதிமிக்க பணி, 96 வயதிலும் வேகம் குறையாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தொண்டறத்தால் பொழுதளக்கும் தூய கொள்கை வீரரான நம் அனபழகன் தமிழை உயிர்மூச்சாகக் கொண்டு, தமிழினத்தின் முன்னேற்றத்திற்காகத் தளராது பாடுபடுபவர். தமிழ்ப் பண்பாட்டை எந்த ஆதிக்க இனமும் ஆக்கிரமித்துவிடக்கூடாது என்பதற்காக திராவிடக் கொள்கை எனும் வேலியை வலுவாக அமைத்துப் பாதுகாப்பவர். வள்ளலார் இராமலிங்க அடிகள், தமிழ்த் தென்றல் திரு.வி.க ஆகியோரின் கருத்துகளிலிருந்து சாறு எடுத்து, தமிழ்ப் பண்பாட்டின் ஆணி வேர்களில் படிந்துள்ள ஆதிக்க நச்சுகளை அடியோடு அழித்தொழிக்கும் பணியை எப்போதும் தொடர்பவர்.

திமுகவின் தொடக்க நாளிலிருந்து இன்றளவும் அதன் வளர்ச்சிக்கான உழைப்பினை நல்கி, திமுகவிற்கு நண்பர்கள் என்றால் தனக்கும் நண்பர்கள், திமுகவிற்கும், கருணாநிதிக்கும் எதிரிகள் என்றால் தனக்கும் எதிரிகள் என்கிற உறுதிமிக்க நிலைப்பாட்டில் ஊன்றியிருப்பவர்.

அரசியல் ஆதாயங்களுக்காக எவர் எங்கே சென்றாலும், திமுகவின் வளர்ச்சியிலும் நெருக்கடிகளிலும் அறிவாலயமே என்றும் தமது வாழ்விடம் என்பதை கருணாநிதியின் நீங்கா நிழலாக இருந்து நிரூபித்து வருபவர்.

தலைவர் கருணாநிதியின் வழிகாட்டுதலில் வீறுநடை போடும் திமுகவிற்கு, அனபழகனே தத்துவ ஆசான். அவர் கற்றுத் தரும் கொள்கைப் பாடம் திமுகவின் எதிர்காலப் பயணத்திற்கு என்றென்றும் கருவூலமாகத் துணைநிற்கும்.

தலைவர் கருணாநிதிக்கு தோழராகவும், கட்சிப் பணிகளை இன்முகத்தோடு தன் தோளில் சுமப்பவருமான அனபழகன் அவர்கள் நூறாண்டு கடந்து நலமோடு வாழ அன்புடன் வாழ்த்தி வணங்குகிறேன்.

இவ்வாறு தனது முகநூலில் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x