Published : 14 Dec 2017 09:23 AM
Last Updated : 14 Dec 2017 09:23 AM

குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும்: ஸ்டாலின், திருநாவுக்கரசர் வலியுறுத்தல்

குட்கா ஊழல் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் சு.திருநாவுக்கரசர் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மு.க.ஸ்டாலின்: தடை செய்யப்பட்ட போதைப் பொருளான குட்கா ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விரும்பியதாக முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன ராவ் தெரிவித்துள்ளார். குட்கா ஊழல் குறித்து சட்டப்பேரவையிலும், வெளியிலும் திமுக சார்பில் குரல் கொடுத்தோம். போராட்டங்கள் நடத்தினோம். இந்த விவகாரத்தில் முழு உண்மைகளும் வெளிவர சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என திமுக சார்பில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.

thirunavukkarasar_1திருநாவுக்கரசர் 

சு.திருநாவுக்கரசர்: தமிழகத்தையே உலுக்கிய குட்கா ஊழல் குறித்து தொடர்ந்து ஆதாரங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் போதைப் பொருட்கள் விற்பனைக்கு ஆளுங்கட்சியினர் துணை போவதை வருமான வரித் துறையின் புலனாய்வுப் பிரிவு அம்பலப்படுத்தியுள்ளது. வருமானவரித் துறை சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் அரசியல்வாதிகள், அதிகாரிகளுக்கு ரூ.39 கோடியே 91 லட்சம் லஞ்சம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

எங்கும் எதிலும் ஊழல் என்பதுதான் அதிமுக அரசின் அணுகுமுறையாக உள்ளது. இத்தகைய ஆட்சியில் குட்கா ஊழல் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடக்கும் என எதிர்பார்க்க முடியாது. கடந்த 16 மாதங்களாக இந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. எனவே, இந்த வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x