

ரூ.6,000 அல்ல ரூ.60,000 கொடுத்தால்கூட மக்கள் ஏமாறத்தயாராக இல்லை. ஆர்.கே.நகர் மக்கள் அதிமுக உள்ளிட்டோருக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள் என திமுக வேட்பாளர் மருதுகணேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இன்று (வியாழக்கிழமை) காலை 8 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 8.10 மணியளவில் பழைய வண்ணாரப்பேட்டையில் வாக்களித்தார் திமுக வேட்பாளர் மருதுகணேஷ்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ரூ.6,000 அல்ல ரூ.60,000 கொடுத்தால்கூட மக்கள் ஏமாறத்தயாராக இல்லை. ஆர்.கே.நகர் மக்கள் அதிமுக உள்ளிட்டோருக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். தேர்தல் நியாயமாக நேர்மையாக ஜனநாயக முறைப்படி நடக்கும் என நம்புகிறோம். ஜெயலலிதாவின் சிகிச்சை வீடியோ குறித்து ஏதும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. தேர்தல் ஆணையம் மீதுள்ள அதிருப்திகள் குறித்து கட்சித் தலைமையிடம் தொடர்ந்து குரல் கொடுத்துவருகிறது" எனக் கூறிச் சென்றார்.