

சென்னை: ‘பெரியார் கொள்கைகளில் பிடிப்பு உள்ளவன் நான். வேலூர் பொதுக்கூட்டத்தில் நான் பயன்படுத்திய வார்த்தைகள் வருத்தத்தை தந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன்’ என்று திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் கடந்த 17-ம் தேதி நடந்த திமுக முப்பெரும் விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசும்போது, “திராவிடர் கழகத்தில் பெரியாரிடம் பணியாற்றினோம். பெரியார் எங்கள் ஊருக்கு (வேலூர்) வந்தார். மணியம்மையைப் பார்த்தார் கூட்டிக்கிட்டு போய்விட்டார். தனக்குப் பின் தி.க.வை நடத்த ஒரு அறிவுள்ள பெண் கிடைத்தார் என்று திருமணம் செய்து கொண்டார். ‘இது பொருந்தாத் திருமணம்’ என்று அண்ணாதுரை அறிக்கை வெளியிட்டு தி.க.விலிருந்து வெளியேறினார். திமுக உருவானது. வேலூரில் மணியம்மை இல்லாவிட்டால், பெரியார் திருமணம் செய்யாவிட்டால் திமுக வந்திருக்காது. எனவே, திமுக வந்ததற்கு எங்கள் மாவட்டம்தான் காரணம்” என்று பேசினார்.
அமைச்சர் துரைமுருகனின் இந்தப் பேச்சு ‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘அரசியல் திரை’ பக்கத்தில் நேற்று பெட்டிச் செய்தியாக வெளியாகி இருந்தது. இந்நிலையில், தனது பேச்சு குறித்து துரைமுருகன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை: வேலூர் பொதுக்கூட்டத்தில் பெரியார் - மணியம்மை திருமணம் குறித்து பேசும்போது பயன்படுத்திய வார்த்தைகள், தி.க.தலைவர் கி.வீரமணி மற்றும் பெரியார் பற்றாளர்களுக்கு வருத்தம் தந்திருப்பதாக அறிகிறேன். நான் பயன்படுத்திய வார்த்தைகள் வருத்தத்தை தந்திருந்தால் அதற்காக வருந்துகிறேன். பெரியார் கொள்கைகளில் நான் எவ்வளவு பிடிப்பு உள்ளவன் என்பதை வீரமணி நன்கு அறிவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.