Published : 23 Sep 2023 06:19 AM
Last Updated : 23 Sep 2023 06:19 AM

சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிக்க செயலி: விரைவில் அறிமுகம் என அமைச்சர் வேலு தகவல்

சென்னை: “சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத்துறைக்கு தெரிவிக்க, ஒரு செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும்” என்று அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

கிண்டி நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் ஆய்வுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது: சாலைகள் பராமரிப்பில், அனைத்து பொறியாளர்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும். சாலைகளை பள்ளமில்லா சாலைகளாக பராமரிக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஆணைய சாலைகளில் குழிகள் இருந்தாலும் ஆய்வு செய்து சீர் செய்ய திட்டஇயக்குநர், மண்டல அலுவலர்களிடம் அறிவுறுத்த வேண்டும்.

தமிழ்நாடு சாலை மேம்பாடுதிட்டம், சென்னை – கன்னியாகுமாரி சாலை மேம்பாடு திட்டம்போன்றவற்றின் கீழ் வரும் சாலைகளில், தார்சாலை போடும் வரைபோக்குவரத்துக்கு ஏற்றவாறு சாலைகளை பராமரிக்க வேண்டும். அவ்வாறு பராமரிக்கத் தவறும் பட்சத்தில், அதனைத் தலைமை பொறியாளர்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

தரத்தை உறுதி செய்ய வேண்டும்: சாலைப் பணிகளை தரமாக செய்வதுடன், பண பட்டுவாடா செய்யும்முன் தரக்கட்டுப்பாட்டு பிரிவு அலுவலர்களின் அலுவலர்களைக் கொண்டு தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

மேம்பாட்டு பணிகளுக்காக ஒப்பந்ததாரர்களிடம் சாலைகளை ஒப்படைத்த பிறகு, அச்சாலைகளில் ஏற்படும் நொடிகளை அவ்வப்போது சீர்செய்து, பணி முடிக்கும் வரை பள்ளமில்லா சாலைகளாக பராமரிக்க வேண்டிய பொறுப்பு அந்த ஒப்பந்ததாரருக்கு உள்ளது.இதை உறுதி செய்ய வேண்டியது அந்தபொறியாளரின் கடமையாகும், இவ்வாறாக இல்லாமல் அந்த ஒப்பந்ததாரர் தார் பணி செய்யும்வரை பள்ளங்களுடன் சாலைகள் வைத்துக் கொண்டிருப்பது அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்து கிறது.

கள ஆய்வு அவசியம்: அனைத்து சாலைப் பணிகளையும் அக்டோபர் தொடங்கும் முன்பாகவே முடிக்க வேண்டும். பிற துறைகளுடன் ஒருங்கிணைந்து உடனடியாக பணிகளை செயலாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைபெய்தவுடன் கள ஆய்வு செய்து,எங்கு மழைநீர் தேங்குகிறது, எங்கு மழை நீர் சாலையைக் கடக்கிறது போன்றவற்றை ஆய்வு செய்து, அவற்றை தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

சென்னையில் அண்ணா சாலை, பூந்தமல்லி சாலை, ஜவகர்லால் நேரு சாலை கத்திப்பாரா முதல் கோயம்பேடு வரை,ஜெனரல் பீட்டர்சன் சாலை, காந்தி இர்வீன் பாலம், திருவள்ளுவர் சாலை, ராமபுரம் சாலை,கொளத்தூர் சாலை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் பணிகளை அடுத்த 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும்.

சாலைகளில் ஏற்படும் பாதிப்புகளை நெடுஞ்சாலைத் துறைக்கு தெரிவிக்க, ஒரு செயலி விரைவில் அறிமுகம் செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

கூட்டத்தில், துறை செயலர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு சாலைமேம்பாட்டுத் திட்ட இயக்குநர் டாக்டர் எஸ்.பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x