

சென்னை: சென்னை போக்குவரத்து போலீஸாரால் ஆதம்பாக்கம் டிஏவி பள்ளி மாணவிகளுக்கு சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கப்பட்டது.
சாலை விதிகள் மற்றும் சாலைபாதுகாப்பின் பல்வேறு அம்சங்கள் குறித்து மாணவ, மாணவிகள் நேரடியாக தெரிந்துகொள்ளும் வகையில் சென்னை மெரினாகடற்கரை அண்ணா சதுக்கத்தில் ‘போக்குவரத்து பூங்கா’ அமைக்கப்பட்டுள்ளது. இந்தபூங்காவுக்கு சாலைப் பாதுகாப்புரோந்து (RSP) மாணவர்களை அழைத்து வந்து, அவர்களுக்கு போக்குவரத்து விதிகள் குறித்து சொல்லிக் கொடுப்பதுடன் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அனுபவம் வாய்ந்த போக்குவரத்து போலீஸார் மற்றும் வார்டன்கள் மாணவ, மாணவிகளுக்கு ‘மின்னணு கண்காட்சி’ மூலம் சாலைப் பாதுகாப்பின் பல்வேறு முக்கிய அம்சங்கள் பற்றி கற்பிக்கின்றனர். அதன்படி, சென்னை போக்குவரத்து போலீஸார் நடப்பு கல்வியாண்டில் சுமார் 350 பள்ளிகளில் இருந்து 10 ஆயிரம் மாணவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளனர். வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வெள்ளி ஆகிய 3 நாட்கள் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆதம்பாக்கம் டிஏவி பள்ளியைச் சேர்ந்த 110சாலை பாதுகாப்பு ரோந்து (RSP) மாணவிகள், கல்விச் சுற்றுலாவாக அண்ணா சதுக்கத்தில் உள்ள போக்குவரத்து பூங்காவுக்கு நேற்று அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு போக்குவரத்து விதிகள் மற்றும் சாலைப்பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது.
மேலும், சிக்னல்களை நிர்வகிப்பது குறித்தும் சொல்லித் தரப்பட்டது. போக்குவரத்து விதிகள் பற்றி பயிற்சி அளித்த போலீஸாருக்கு ஆதம்பாக்கம் டிஏவி பள்ளி முதல்வர் ஜே.கீதா நன்றி தெரிவித்தார்.