Published : 23 Sep 2023 06:10 AM
Last Updated : 23 Sep 2023 06:10 AM
சென்னை: நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத 2 பெண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நேரடி உதவிப் பிரிவு அதிகாரிகளாக தற்போது பணிபுரிபவர்களுக்கும், பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கும் உரியபதவி உயர்வு வழங்கக் கோரிஓய்வுபெற்ற அதிகாரியான ஸ்டீபன் ஜோசப் தேவதாஸ் பாண்டியன் உள்ளிட்ட பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், நேரடி உதவிப் பிரிவு அதிகாரிகளுக்கு அந்தந்த துறைகளில் கூடுதல் செயலாளர் வரை பதவி உயர்வு வழங்க உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை எனக்கூறி நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை எனில் சம்பந்தப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளான ஸ்வர்ணா மற்றும் மைதிலி கே.ராஜேந்திரன் ஆகியோர் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரித்து இருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்குமீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி உரிய பதவி உயர்வு வழங்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், சி.சரவணன் அடங்கியஅமர்வு, இந்த வழக்கில் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாத ஐஏஎஸ் அதிகாரிகளின் செயல்நீதிமன்றத்தை கேலிக்கூத்தாக்குவது போல் உள்ளது எனக்கூறி அதிகாரிகள் ஸ்வர்ணா மற்றும் மைதிலி கே.ராஜேந்திரன் ஆகிய இருவருக்கும் எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரன்ட் பிறப்பித்து, விசாரணையை வரும் அக்.4-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT