

சென்னை: பிறவியிலேயே இதய பாதிப்பு உள்ள திருவொற்றியூரை சேர்ந்த மணிமாலா (24) என்ற கர்ப்பிணிக்கு முழு இதய தடுப்பு (பிளாக்) ஏற்பட்ட நிலையில் சென்னை ராயபுரம் அரசு ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன்முறையாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு அதிநவீன உயிர் காக்கும் சிசேரியன் அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. அரசு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர்களுடன் இணைந்து இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இந்த தகவல் அறிந்து நேற்று மருத்துவமனைக்கு வந்த சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சிகிச்சை பெற்ற மணிமாலா மற்றும் அவரது குழந்தையை சந்தித்து நலம் விசாரித்தார். வெற்றிகரமாக சிகிச்சை அளித்த மருத்துவக் குழுவினரைப் பாராட்டினார்.
தொடர்ந்து, ரூ.17 லட்சம் செலவில் டிஜிட்டல் நுண்கதிர் பரிசோதனை கருவி சேவையை தொடங்கிவைத்த அமைச்சர், ‘ஸ்டான்லியா-23’ வருடாந்திர விளையாட்டுப் போட்டியை பார்த்தார்.
ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனை மருத்துவக் கண்காணிப்பாளர் சாந்தி இளங்கோ, ஸ்டான்லி டீன் பாலாஜி, துணை முதல்வர் ஜெனட் சுகந்தா, எம்எல்ஏ ஐட்ரீம் இரா.மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.