சென்னையில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இன்றும், நாளையும் விநாயகர் சிலை ஊர்வலம்: 4 இடங்களில் சிலைகளை கரைக்க ஏற்பாடு
சென்னை: விநாயகர் சதுர்த்தியையொட்டி தமிழகம் முழுவதும் பொது இடங்களில் 1.50 லட்சத்துக்கு மேற்பட்டவிநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.
சென்னையில் மட்டும் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட விநாயகர் சிலைகள்வைக்கப்பட்டு உள்ளன. இவற்றில் 1,500 சிலைகள் பிரம்மாண்ட சிலைகளாகும். ஆவடியில் 204,தாம்பரத்தில் 425 பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன.
இந்நிலையில், தற்போது, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், 24-ம் தேதி வரை சிலை கரைப்புக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் இன்று (சனிக்கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ளது. இதையொட்டி பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலை நகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி எழும்பூர், சிந்தாதிரிப்பேட்டை, நுங்கம்பாக்கம், புதுப்பேட்டை, பெரம்பூர், வியாசர்பாடி, புளியந்தோப்பு, பட்டாளம், சவுக்கார்பேட்டை, அயனாவரம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், தேனாம்பேட்டை, தி.நகர், எம்.ஜி.ஆர்.நகர்,வடபழனி, சைதாப்பேட்டை, வில்லிவாக்கம், கொளத்தூர், திருமங்கலம், மதுரவாயல், கோயம்பேடு உள்ளிட்ட பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
எடுத்துச் சென்று இன்றும் நாளையும் கடலில் கரைக்கப்படுகின்றன. இதற்காக
சென்னை பட்டினப்பாக்கத்தில் இடம் ஓதுக்கப்பட்டுள்ளது. இதை
முன்னிட்டு அப்பகுதியில் தடுப்புகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அடையாறு, கிண்டி, ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், நங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர் உள்ளிட்ட பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் நீலாங்கரை கடற்கரையிலும், தங்கசாலை, வண்ணாரப்பேட்டை, ராயபுரம், தண்டையார்பேட்டை, ஆர்.கே.நகர், கொடுங்கையூர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகள்காசிமேடு மீன்பிடி துறைமுகம் பகுதியிலும், திருவொற்றியூர் மற்றும்அதைச் சுற்றியுள்ள பகுதிகள் பாப்புலர் எடைமேடை பின்புறத்திலும் விநாயகர் சிலைகளைக் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பட்டினப்பாக்கத்தில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்கும் வகையில் ட்ராலியும், பிரம்மாண்ட சிலைகளை தூக்கிச் சென்று கரைக்க கிரேன் வசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், நீலாங்கரை, காசிமேடு பகுதிகளில் விநாயகர் சிலைகளை கடலில் கரைக்க படகு வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல், ஆவடி, தாம்பரம் பகுதியில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகளை கரைக்கவும் போலீஸார் ஏற்பாடு செய்துள்ளனர்.
விநாயகர் சிலை ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகளையும் போலீஸார் செய்துள்ளனர். அதன்படி ஒவ்வொரு விநாயகர் சிலையும் போலீஸார் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ளது. அந்த வகையில், சென்னையில் 18,500 போலீஸார், ஆவடியில் 2,080 போலீஸார், தாம்பரத்தில் 1,500 போலீஸார் என மொத்தமாக 22,080 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சிலைகள் கரைக்கப்படும் கடற்கரை பகுதியில் அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார்நிலையில் வைக்கப்பட இருக்கின்றனர். ஊர்வலப் பாதைகள், சிலைகள் கரைக்கும் இடங்களில் கட்டுப்பாடுகளை மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
