

வேலூர்: பேரணாம்பட்டில் ரூ.7.60 கோடி மதிப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதல்வரால் திறக்கப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் ஒரு மாதமாகியும் நோயாளி களுக்கு முழு அளவில் சிகிச்சை அளிக்கும் வகையில் பயன்பாட்டுக்கு வராமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு நகரம் தமிழக-ஆந்திர எல்லையில் உள்ளது. ஏறக்குறைய மிகவும் பின்தங்கிய, ஏழை கூலி தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த கிராமங்களை பின்னணியாக கொண்ட பகுதியாக இருந்து வருகிறது. பேரணாம்பட்டு நகரமும் பெரியளவில் வளர்ச்சி அடையாமல் இருந்து வருகிறது. பேரணாம்பட்டு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் மருத்துவ சிகிச்சைக்காக குடியாத்தம் அல்லது ஆம்பூருக்கு சென்று வந்தனர்.
அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்த அரசு மருத்துவமனை பேரணாம்பட்டில் தொடங்கப்பட்டு போதுமான அளவுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் வசதியுடன் செயல்பட்டு வருகிறது. பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் தினசரி சராசரியாக 1,000 பேர் புறநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். ஆனால், நோயாளிகளுக்கான அடிப்படை வசதிகள், கூடுதல் மருத்துவ சிகிச்சைகள் அளிக்க முடியாத அளவுக்கு இருந்து வருகிறது. பெரும்பாலான நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு வந்தனர். அதேநேரம், குடியாத்தம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியுள்ளதால் அங்கும் சிகிச்சை பெற முடியாத நிலை உள்ளது. அதனால், வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், பேரணாம்பட்டு அரசு மருத்துவ மனைக்காக சுமார் ரூ.7.60 கோடி மதிப்பில் புறநோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. அங்கு மின்தூக்கி (லிப்ட்) உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் 22-ம் தேதி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். இது பேரணாம்பட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக இருந்தாலும், அந்த புதிய கட்டிடம் முழு அளவில் செயல்படாமல் முடங்கி கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.
30 படுக்கை வசதிகளுடன் ஒரு அறுவை சிகிச்சை அரங்குடன் கட்டப்பட்ட அந்த கட்டிடம் முதல்வர் திறந்து வைத்து ஒரு மாதமாகியும், முழு அளவில் செயல்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், போதிய அளவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாமல் இருப் பதாக கூறப்படுகிறது. இங்கு, 4 மருத்துவர்கள் மட்டும் பணியில் இருப்பதால் சுழற்சி முறையில் புற நோயாளிகள் மற்றும் உள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது, இரவு பணி என கடுமையான பணிச்சூழலில் இருப்பதாக கூறப்படுகிறது. பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையை தாலுகா அளவிலான மருத்துவமனையாக தரம் உயர்த்தி கூடுதல் வசதிகளுடன் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக் கையாக இருந்து வருகிறது.
இதுகுறித்து, மருத்துவ துறை அதிகாரிகளிடம் விசாரித்தபோது, ‘‘புதிய கட்டிடத்தை முதல்வர் காணொலியில் திறந்து வைத்த மறுநாள் முதல் புறநோயாளிகள் பிரிவு செயல்பட தொடங்கியுள்ளது. அங்கு, உள் நோயாளிகளுக்கான 30 படுக்கை வசதிகளும் உள்ளன. பழைய கட்டிடத்தில் இருந்து புதிய கட்டிடத்துக்கு மருத்துவ உபகரணங்கள் மாற்ற சில இறுதி கட்ட பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது. அந்த பணிகள் முடிந்த பிறகே புதிய கட்டிடம் முழு அளவில் செயல்பாட்டுக்கு வரும்’’ என தெரிவித்தனர்.