Published : 22 Sep 2023 08:12 PM
Last Updated : 22 Sep 2023 08:12 PM

“தெருவெல்லாம் கழிவு நீர்...” - மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயரிடம் கொந்தளித்த திமுக, அதிமுக கவுன்சிலர்கள்

மதுரை: “திரும்பிய பக்கமெல்லாம் பாதாள சாக்கடை கழிவுநீர் ஓடுகிறது. கவுன்சிலராக இருக்கிறதா, வேண்டாமா என்ற முடிவெடுக்க வேண்டிய உள்ளது’’ என்று மதுரை மாநகராட்சி கூட்டத்தில் திமுக, அதிமுக கவுன்சிலர்கள் ஒரே குரலில் மேயர் இந்திராணியிடம் கொந்தளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார், துணைத் தலைவர் நாகராஜன் முன்னிலை வகித்தார். மண்டலத் தலைவர் வாசுகி: மழை பெய்யும்போதெல்லாம் மதுரை நத்தம் சாலையில் இரு சக்கர வாகனங்கள் மூழ்கும் அளவிற்கு மழைநீர் தேங்குகிறது. ஒட்டுமொத்த போக்குவரத்தும் பாதிக்கப்படுகிறது. மழைநீர் வழிந்தோடுவதற்கு வசதியில்லாமல் நத்தம் சாலை இருபுறமும் உள்ள மழைநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதுபோல், அய்யர் பங்களா ஜங்ஷனில் சில நேரங்களில் மாடுகள் படுத்துவிடுவதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு மக்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகிறார்கள்.

மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார்: சாலைகளில் நடமாடும் மாடுகளை பிடித்து ஸ்பாட் பைன் ரூ.10 ஆயிரம் விதித்து, பிடிப்படும் மாடுகளுக்கு ‘டேக்’ மாட்டி அதன் உரிமையாளர் பெயர், முகவரியை பதிவு செய்து எச்சரித்து அனுப்புகிறோம். திருப்பி அதே மாடு பிடிப்பட்டால் அந்த மாடுகளை ஒப்படைக்காமல் பறிமுதல் செய்கிறோம். தற்போது இதுபோல் பறிமுதல் செய்யப்படும் மாடுகளை பாதுகாக்க மாநகராட்சி சார்பில் கோசாலை அமைக்க உள்ளோம்.

மண்டலத் தலைவர் சரவண புவனேஷ்வரி: வார்டு அலுவலகங்களில் பணிபுரியும் மாநகராட்சி பணியாளர்கள், வேலைப்பார்க்காமல் ஏமாற்றுகிறார்கள். கேட்டால் பீல்டில் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் பணிக்கு வருகிறார்களா? இல்லையா? என்பது கண்காணிக்கப்படவில்லை. மண்டல அலுவலங்களை போல், அவர்கள் வருகையை உறுதி செய்வதற்கு வார்டு அலுவலங்களில் ‘பயோமெட்ரிக்’ வருகை பதிவேடு அமைக்க வேண்டும்.

மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் பேசும்போதே எழுந்த சில திமுக கவுன்சிலர்கள், ‘‘கவுன்சிலர்களாக இருக்கிறதா, வேண்டாமா என முடிவெடுக்க வேண்டிய இருக்கிறது. எங்கள் வார்டுகளில் இதுவரை தெருவில் ஓடிய வீட்டிற்குள் சாக்கடை வரத் தொடங்கிவிட்டது. அதிகாரிகளுக்கு போன் செய்தால் எடுப்பதில்லை. மாநகராட்சியில் பேசினாலும் அதற்கு பதில் வழங்குவதில்லை’’ என்று ஆவேசமடைந்தனர்.

அவர்களை தொடரந்து எழுந்து பேசிய அதிமுக கவுன்சிலர் சண்முகவள்ளி, ‘‘இதேபால்தான் என்னுடைய வார்டில் 13 தெருக்களில் பாதாசாக்கடை நிரம்பி தெருக்களில் ஓடுகிறது. கவுன்சிலரான நாள் முதல் கூறிவருகிறேன்’’ என்றார். அவரை தொடர்ந்து பேசிய அதிமுக கவுன்சிலர் ரூபன் குமார், ‘‘எங்கள் தனிப்பட்ட பிரச்சினைக்காக உங்களிடம் வரவில்லை. மக்கள் பிரச்சனை. இல்லையென்றால் முடியாது என்றால் அதை பதிலாக எழுதி தாருங்கள், நாங்கள் போஸ்டர் அடித்து மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்’’ என்றார்.

கோபமடைந்த மேயர் இந்திராணி, ‘‘உங்கள் அதிமுக ஆட்சி 10 ஆண்டு நடந்தது. அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள். போஸ்டர் அடித்து ஒட்டுவேன் என்கிறீர்கள். சும்மா, ஏன் கத்துறீங்க, நாங்களாவது பாதாளசாக்கடை பிரச்சனைக்கு தீர்வு காண வேலைப்பார்த்துக் கொண்டுஇருக்கிறோம்’’ என்றார்.

அதிமுக மாநகராட்சி எதிர்கட்சித் தலைவர் சோலைராஜா, ‘‘இன்று கூட செல்லூர், நரிமேடு பகுதியில் 30 பொதுமக்கள் பாதாள சாக்கடையால் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டு அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலும் அதிகரித்து வருகிறது. மாநகராட்சி என்ன செய்து கொண்டிருக்கிறது’’ என்றனர். தொடர்ந்து அதிமுக, திமுக கவுன்சிலர்கள், தொடர்ந்து மேயரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டத்தில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

கல்விக் குழு தலைவர் ரவிசந்திரன் (திமுக) உடனே எழுந்து, ‘‘ஏன் மேயரிடம் கோபப்படுகிறீர்கள்’’ என்று அவருக்கு ஆதரவாக பேசத் தொடங்கினார். அதிருப்தியடைந்த மற்ற திமுக கவுன்சிலர்கள், ‘‘உங்காருங்கண்ணே, சும்மா முட்டுக் கொடுக்காதீர்கள், இப்ப யாரு தவறாக பேசினா்கள், மக்கள் பிரச்சனையை தீர்க்க பேசுறாங்க’’ என கொந்ததளித்தனர்.

மண்டலத் தலைவர் முகேஷ்சர்மா (திமுக): கவுன்சிலர்கள் அவர்கள் வார்டில் உள்ள பிரச்சனைகளை கூறுகிறார்கள். இதில் அவங்க ஆட்சி, நம்ம ஆட்சி என்று அரசியலாக பார்க்க வேண்டாம். மக்கள் பிரச்சனையாக பார்ப்போம். ஒரு கவுன்சிலர் பதவியேற்ற நாள் முதல் வேலைப்பார்க்காத ஒரு வால்வு ஆப்ரேட்டரை மாற்றி சொல்லி வருகிறார். இதுவரை அவர் மாற்றப்படவில்லை. பிறகு எப்படி கவுன்சிலர்களை மாநகராட்சி ஊழியர்கள் மதிப்பார்கள்’’ என்றார்.

மேயர் இந்திராணி: எல்லா வார்டுகளில் ஊழியர்கள், அதிகாரிகள் பற்றாக்குறை. யாரை எங்கு மாற்றுவது என்பது தெரியவில்லை. கவுன்சிலர்களை அவமதிக்கும் நோக்கில்லை.

தொடர்ந்து பேசிய முகேஷ் சர்மா, ‘‘பாதாளசாக்கடை பிரச்சனை மாநகராட்சியில் வசிக்கும் மக்கடைய ஆரோக்கியத்தையும், வாழ்வாதாரத்தையும் பாதிக்கிறது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சிறப்பு அதிகாரிகள் குழுவை அமைக்க கடந்த 2 கூட்டங்களாக கூறி வருகிறேன். மக்கள் கவுன்சிலர்கள் வீடுகளை முற்றுகையிடுவதோடு சாலைகளில் மறியலுக்கு செல்கிறார்கள். எத்தனை முறைதான் அவர்களை சமாதானம் செய்து தடுப்பது. பாதாளசாக்கடை பிரச்சனைக்கு முதல் முக்கியத்துவம் கொடுங்கள்’’ என்றார்.

மதிமுக கவுன்சிலர் பாஸ்கரன் பேசுகையில், ‘‘மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி உள்ள என்னுடைய வார்டில் முன்பு 74 தெருக்கள் மட்டுமே இருந்தது. குடிநீர், பாதாளசாக்கடை பணிக்கு 7 பணியாளர்கள் இருந்தனர். இன்று 136 தெருக்கள் உள்ளன. ஆனால், 4 மாநகராட்சி பணியாளர்கள் பணிபுரிகிறார்கள். அதனால், பாதாளாக்கடை கழிவு நீர் நிரம்பி செல்கிறது.

மழைநீர் தேங்கி நிற்கிறது. ஒரு சில பகுதியில் குடிநீருடன் கழிவு நீர் கலந்து வருகிறது. வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியவில்லை. பக்தர்கள், பொதுமக்கள் கோயிலுக்கு நடந்து செல்ல முடியவில்லை. கடந்த திங்கட்கிழமை கழிவு நீர், மழைநீர் தேங்கியதால் வியாபாரிகள் என்னை அடிக்க வந்துவிட்டார்கள். மாநகராட்சி அதிகாரிகள் தங்கள் கடமையை சரியாக செய்யாததால் கவுன்சிலர்கள் மக்களிடம் அடியும் வாங்க வேண்டிய நிலையும் வருகிறது’’ என்றார்.

குஜராத்தில் இருந்து மதுரைக்கு வந்த ‘ரோபட்’ இயந்திரம்: மாநகராட்சி ஆணையாளர் பிரவீன்குமார் பேசும்போது, “மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகையும், கட்டிடங்கள் எண்ணிக்கையும் பல மடங்கு பெருகிவிட்டது. பெருநகரங்களை போல் மதுரை நகர் பகுதியிலும் தற்போது அப்பார்ட்மெண்ட் வீடுகள் வந்துவிட்டன. அதனால், பழைய பாதாளசாக்கடை திட்டத்தால் அளவிற்கு அதிகமான கழிவு நீரை கடத்தி செல்ல முடியவில்லை.

பாதாள சாக்கடை குழாய்கள் தாங்காமல் அவை உடைந்து கழிவு நீர் வெளியேறுகிறது. இதற்கு தீர்வு காண டாடா கண்சல்ட்டெண்ட் நிறுவனம் மூலம், நகர் பகுதியில் உள்ள பழைய பாதாள சாக்கடை திட்டத்தை சீரமைக்க ஆய்வு நடந்து வருகிறது. ஒரு மாதத்தில் இந்த ஆய்வு நிறைவு செய்து நகர்பகுதியில் உள்ள பாதாள சாக்கடை விரைவில் சீரமைக்கப்படும். அதுபோல், மனிதர்கள் இறங்கி பணிபுரிய முடியாத பாதாளசாக்கடை பகுதிகளில் இறங்கி பணிபுரிய ரோபட் வாகனம் குஜராத்தில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளது. கணிணி, காமிரா மூலம் அது பாதாளசாக்கடையை சுத்தம் செய்யும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x