சனாதன சர்ச்சைப் பேச்சு | தமிழக அரசு, உதயநிதி ஸ்டாலின் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் | கோப்புப்படம்
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: சனாதன சர்ச்சைப் பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தொடர்பாக தமிழக அரசும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் நடைபெற்ற தமிழக முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், "இந்த மாநாட்டின் தலைப்பே மிகவும் சிறப்பாக அமைந்திருக்கின்றது. ‘சனாதன எதிர்ப்பு மாநாடு’ என்று போடாமல் ‘சனாதன ஒழிப்பு மாநாடு’ என்று நீங்கள் போட்டிருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய வாழ்த்துகள். சிலவற்றை நாம் ஒழிக்கத்தான் வேண்டும். எதிர்க்க முடியாது. கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும்.

அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனம் என்பதை எதிர்ப்பதைவிட, ஒழிப்பதே நாம் செய்ய வேண்டியதே முதல் காரணம். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு வைத்திருக்கிறீர்கள். அதற்கு என்னுடைய பாராட்டுக்கள்" எனத் தெரிவித்திருந்தார். இது தேசிய அளவில் விவாதப் பொருளாகி பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. மேலும், பாஜக மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில், உதயநிதி ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளனர். எனவே, உதயநிதி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டு நிகழ்ச்சியில் அமைச்சர்கள் உதயநிதி, சேகர்பாபு கலந்துகொண்டதை சட்டவிரோதம் என அறிவிக்க வேண்டும். மேலும், சனாதனம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். இந்த நிகழ்ச்சி நடத்தியதன் பின்னணியில் ஏதேனும் சதி உள்ளதா என்பது குறித்து கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி ஜெகநாதன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் ஏன் விசாரிக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஏதேனும் உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெறலாம் எனக்கூறி வழக்கை விசாரிக்க மறுப்பு தெரிவித்தனர்.

அப்போது மனுதாரர் நீதிபதிகள் முன்பு, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக்கட்ட வேண்டும். அதுபோலத்தான் சனாதனம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்ததை சுட்டிக்காட்டி, விடாமல் கூறிக்கொண்டே இருந்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், சனாதன சர்ச்சை பேச்சு தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் பங்கேற்றது தொடர்பாக தமிழக அரசும் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in