பல்லாவரம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட 3 எம்-சாண்ட் குவாரிகளுக்கு சீல்: செங்கை மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பல்லாவரம்: பல்லாவரம் அருகே அனுமதியின்றி செயல்பட்ட 3 எம்-சாண்ட் குவாரிகளுக்கு சீல் வைக்கப்பட்டது. பல்லாவரம் அருகே பம்மல், திருநீர்மலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அரசு அனுமதியின்றி இயங்குவதுடன் தரமான எம்-சாண்ட் விற்காமல் கலப்படம் செய்தும், கூடுதல் விலைக்கும் விற்பனை செய்வதாக செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் உத்தரவின் பேரில் பல்லாவரம் வட்டாட்சியர் ட்டி.ஆறுமுகம் தலைமையில் 20 பேர் கொண்ட அதிகாரிகள் நேற்று பம்மல், திருநீர்மலை பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் ஆய்வு மேற்கொண்டனர். அதில் 4 நிறுவனங்கள் மட்டுமே அரசிடம் இருந்து அனுமதி பெற்றிருந்தன. 50-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அனுமதி பெறாமலும் தரமான எம்-சாண்ட் விற்காமல் கலப்படம் செய்தும், கூடுதல் விலைக்கும் விற்பனை செய்வது தெரியவந்தது.

இதனையடுத்து முதல் கட்டமாக 3 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து 4 நிறுவனங்கள் செயல்படாமல் இருக்க, நிறுவனத்தின் முன்பு பள்ளம் தோண்டப்பட்டது. இது குறித்து வட்டாட்சியர் ட்டி.ஆறுமுகம் கூறியதாவது: மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் பம்மல் திருநீர்மலை, அனகாபுத்தூர் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு அரசு அனுமதி இன்றி ஏராளமான கல்குவாரிகள் இயங்கின. மேலும் எம்-சாண்டில் சவுண்டு மண், கடல் மண் பாறை மண் உள்ளிட்ட மணல்களை கலந்து விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதனையடுத்து முதல் கட்டமாக 3 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 4 நிறுவனங்கள் செயல்படாமல் இருக்க நிறுவனத்தின் முன் பகுதியில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் சீல் வைக்கப்படும் என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in