Published : 22 Sep 2023 06:31 AM
Last Updated : 22 Sep 2023 06:31 AM

இந்தியாவின் வரலாறு காவிரிக் கரையிலிருந்து எழுதப்பட வேண்டும்: அமைச்சர் தங்கம் தென்னரசு கருத்து

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் நேற்று தொல்லியல் துறை சார்பில் நடைபெற்ற அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு என்ற கருத்தரங்கத்தை தொடங்கி வைத்து பேசிய தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு. உடன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பல்கலைக் கழக துணை வேந்தர் வி.திருவள்ளுவன், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மற்றும் பலர் உள்ளனர். படம் ஆர்.வெங்கடேஷ்

தஞ்சாவூர்: இந்தியாவின் வரலாறு கங்கை சமவெளியில் இருந்து இல்லாமல், காவிரிக் கரையில் இருந்து எழுதப்பட வேண்டும் என தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு கருத்தரங்கு தொடக்க விழா தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக இணைப் பேராசிரியர் வீ.செல்வகுமார் வரவேற்றார். துணைவேந்தர் வி.திருவள்ளுவன் தலைமை வகித்தார்.

அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியர் தீபக் ஜேக்கப், எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், மேயர் சண்.ராமநாதன், துணைமேயர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கருத்தரங்கைத் தொடங்கிவைத்து, 'அண்மைக்கால ஆய்வுகள் காட்டும் தமிழ்நாட்டு வரலாறு' என்ற தலைப்பில் தமிழக நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியது:

தமிழகத்தின் வரலாறு முதன்முதலில் நமக்கு அன்பில் செப்பேடுகள் மூலம்தான் தெரியவந்தது. அதன் மூலம்தான் சோழர்களின் கொடை, ஆட்சிமுறைகள் போன்றவை வெளியுலகுக்கு தெரியவந்தன. இந்தியாவின் வரலாறு கங்கைச் சமவெளியில் இருந்து எழுதுவது அல்ல, அது காவிரிக் கரையில் இருந்து எழுதக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதை நிரூபிக்கக்கூடிய வகையில் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

கீழடி, பொருநை, வெம்பக்கோட்டை, வைப்பாறு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மூலம் தமிழகத்தின் வரலாறு எந்த அளவுக்குப் பின்னோக்கிச் செல்கிறது என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.

தமிழரின் நாகரிகம், சமுதாயம் போன்றவை எப்படி இருந்தன, அவை எப்படி மறைக்கப்பட்டன என்பதை எல்லாம் நாம் அறிந்துகொண்டால்தான், எதிர்காலத்தில் வரக்கூடிய சவால்களை எதிர்கொள்ள முடியும். இவ்வாறு பேசினார்.

தொடர்ந்து, கருத்தரங்க அமர்வுகள் நடைபெற்றன. இதில், பல்வேறு தொல்லியல் அறிஞர்கள் உரை நிகழ்த்தினர். இன்று கருத்தரங்கத்தின் நிறைவு நிகழ்ச்சி நடைபெறுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x