Published : 19 Jul 2014 10:04 AM
Last Updated : 19 Jul 2014 10:04 AM

மனித வேட்டையாடும் சிறுத்தையைப் பிடிக்க கூண்டு தயார்: திம்பம் வனப்பகுதியில் வனத்துறையினர் தீவிரம்

திம்பம் வனச்சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த வனக்காவலரை சிறுத்தை கடித்துக்கொன்ற சம்பவத் தையடுத்து, மனிதவேட் டையாடும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை முழுவீச்சில் களமிறங்கியுள்ளது. சிறுத்தையை பிடிப்பதற்காக, திம்பம் வனப்பகுதியில் இரு இடங்களில் கூண்டுகள் வைக்கப் பட்டுள்ளன.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, மான் என பலதரப்பட்ட வன உயிரினங்கள் உள்ளன. பண்ணாரியில் இருந்து திம்பம் வரையிலான வனப்பகுதியை ஒட்டிய சாலையில் வனவிலங்குகள் உலாவுவது அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் 11ம் தேதி, தாளவாடியை சேர்ந்த முகமது இலியாஸ் என்பவர் சிறுத்தை தாக்கியதில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்த சாலையில் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சிறுத்தையின் நடமாட்டத்தை அறிய ரகசிய கேமராக்களை வனத்துறை பொருத்தியது.

மனித வேட்டையாடிய சிறுத்தை திம்பம் சாலையை ஒட்டிய பகுதிகளில் சுற்றித்திரிவதாக தொடர்ந்து தகவல்கள் வந்த வண்ணம் இருந்தன. இந்நிலையில், தலமலை வனச்சரகம் திம்பம் வனச்சோதனைச் சாவடியில் வியாழக்கிழமை இரவு பணியில் இருந்த வனக்காவலர் க.கிருஷ்ணனை சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது. உயிரிழந்த கிருஷ்ணனுக்கு மனைவி, மகள், இரு மகன்கள் உள்ளனர்.

அப்பகுதி மக்களிடம் பீதியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தை தொடர்ந்து, ஈரோடு மண்டல வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன், சத்தி புலிகள் காப்பக துணை இயக்குநர்கள் கே.ராஜ்குமார், சி.ஹெச்.பத்மா, பாரி ஆகியோர் வெள்ளிக்கிழமை சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், தலமலையில் புறப்பட்ட அரசுப் பேருந்து வியாழக்கிழமை இரவு 8.30 மணிக்கு திம்பம் சோதனைச் சாவடிக்கு வந்துள்ளது. அப்போது, பூட்டி இருந்த சோதனைச்சாவடியை கிருஷ்ணன் திறந்துவிட்டார். பேருந்து சென்றபிறகு, சோதனைச்சாவடியை பூட்டை பூட்டிவிட்டு, அப்பகுதியில் சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். அப்போது அங்கு பதுங்கியிருந்த சிறுத்தை கிருஷ்ணன் மீது பாய்ந்தது. அதனிடமிருந்து தப்பிக்க ஓடிய கிருஷ்ணனை சிறுத்தை கடித்துக் கொன்று, சடலத்தை 50 அடி தூரம் வரை இழுத்துச் சென்றது தெரியவந்தது.

மனிதரை கொன்று பழகிய சிறுத்தையை உடனடியாக பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் தீவிரமாக செயல்பட்டுள்ளனர். முதற்கட்டமாக, சத்தியில் இருந்து 2 இரும்புக்கூண்டுகள் திம்பம் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன.

கள இணை இயக்குநர்களின் ஆலோசனைப்படி நீர்நிலை மற்றும் சிறுத்தையின் வழித்தடத்தில் வெள்ளிக்கிழமை இரவு கூண்டுகள் வைக்கப்பட்டன. இரு கூண்டுகளில் ஒன்றில் ஆடு, மற்றொன்றில் நாய் கட்டப்பட்டுள்ளது.

இது குறித்து மண்டல வனப்பாதுகாவலர் ஐ.அன்வர்தீன் கூறியது: சிறுத்தையும் வனக்காவலரும் நேருக்குநேராக மோதிக்கொண்டதில் அவரை சிறுத்தை தாக்கி கொன்றுள்ளது. இது எதிர்பாராத நிகழ்வு. 2 பேரை கடித்துக் கொன்ற இந்த சிறுத்தையை இதே வனத்தில் தொடர விட்டால் மீண்டும் ஆபத்துகள் நிகழும் என்பது உறுதியாகிவிட்டது.

எனவே இதைப் பிடித்து வேறு இடத்தில் விடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறோம். புலிகள் காப்பக விதிகளின்படி கூண்டுகள் வைக்கப்பட்டு சிறுத்தை பிடிக்கப்படும். திம்பம் பகுதியில் உலாவும் சிறுத்தைதான் 2 பேரையும் கொன்றுள்ளது என தீர்மானிக்கிறோம். இரண்டொரு நாளில் சிறுத்தை பிடிக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x