Published : 22 Sep 2023 04:00 AM
Last Updated : 22 Sep 2023 04:00 AM

இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்படும் என்ற பாஜகவின் கனவு பலிக்காது: முத்தரசன்

முத்தரசன் | கோப்புப் படம்

புதுச்சேரி: இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்படும் என்ற பாஜகவின் கனவு பலிக்காது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

புதுச்சேரி மாநில கலை இலக்கிய பெருமன்றம் சார்பில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு தொடக்க விழா புதுச்சேரியில் நேற்று நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்படும் என்ற பாஜகவின் கனவு பலிக்காது. கேரளம், மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்றஅடிப்படையில் அங்கு தனித்து போட்டி என மார்க்சிஸ்ட் கூறியுள்ளது. அது கூட்டணியில் பாதிப்பை ஏற்படுத்தாது. அதே நேரத்தில் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வேண்டும், மதச்சார்பற்ற தன்மை உள்ளிட்ட கொள்கைகளில் இண்டியா கூட்டணிக் கட்சிகள் ஒருமித்து செயல்பட்டு, தேர்தலில் வெற்றி பெறும்.

நாடு தற்போது ஜனநாயக பாதையிலிருந்து விலகிச் செல்வது சரியல்ல. புதுவையில் கவிஞர் தமிழ் ஒளிக்கு சிலை வேண்டும் மேலும் அவர் பேசுகையில், “கவிஞர் தமிழ் ஒளி ஜனநாயகம் காக்கவும், சமுதாய ஏற்றத் தாழ்வுகள் நீங்கவும், தீண்டாமை ஒழியவும், சாதி, மதம் இல்லாத சமதர்ம சமுதாயம் மலரவும் போராடியவர்.

அவரது நூற்றாண்டை முன்னிட்டு தமிழக அரசானது தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஒளியின் மார்பளவு சிலை அமைக்கவும், மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தி பரிசளிக்கவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதைப்போல புதுவை அரசும் செயல்படுத்த வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

நாட்டின் பெயரை மாற்றுவதற்கு விவாதம், ஆலோசனை ஏதுமின்றி செயல்படும் மத்திய அரசின் போக்கு ஜனநாயகத்துக்கு நல்லதல்ல. மகளிருக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அறிக்கையாக பெறப்பட்டு, மாநிலங்களவையில் நிறைவேற்றப் பட்டுள்ளது.

கடந்த 2014-ம் ஆண்டு முதல் மத்தியில் ஆட்சியிலிருக்கும் பாஜக, 2024 மக்களவைத் தேர்தலுக்காகவே அவசரமாக அந்த மசோதாவை தற்போது நிறைவேற்றியுள்ளது. நாட்டில் மீண்டும் மக்கள்தொகை கணக்கெடுத்து, அதன்படி மகளிருக்கான இடஒதுக்கீடை செயல்படுத்த வேண்டும். ஆனால், அந்த முறைகள் பின்பற்றப்படாமல் ஏமாற்றும் வகையில் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியுள்ளது.

நாட்டில் 2 கோடி பேருக்கு வேலை, வங்கிக் கணக்கில் பணம் செலுத்துதல், விலைவாசி குறைப்பு போன்ற தேர்தல் வாக்குறுதிகளை பாஜக நிறைவேற்றவில்லை. ஆனால், சனாதனம் குறித்து விவாதிக்காமல், மதம் அழிப்பு என திசைத் திருப்பி பாஜகவினர் மக்களிடமிருந்து தப்பிக்க முயற்சிக்கின்றனர். பிரதமர் நரேந்திர மோடியே தவறான தகவலை பரப்புகிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவ்வப்போது பெரியார், அண்ணா குறித்து தவறாக பேசிவிளம்பரம் தேடுகிறார். அண்ணா பெயரில் கட்சி நடத்தும் அதிமுகவினர் பாஜகவை கண்டிப்பது போல பேசிய நிலையில், திடீரென அக்கட்சியின் பொதுச் செயலாளர் அதற்கு தடை போட்டிருப்பது அக்கட்சி அவரது கட்டுப்பாட்டில் இல்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.

அதிமுகவானது எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தைப் போல சுய சிந்தனையுடன் செயல்படாமல், பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் உள்ளது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x