பொறியியல் பொது கவுன்சலிங் 7-ம் தேதி தொடங்குகிறது: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பொறியியல் பொது கவுன்சலிங் 7-ம் தேதி தொடங்குகிறது: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
Updated on
1 min read

உச்சநீதிமன்ற உத்தரவின்படி நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, பொறியியல் படிப்புக்கான கவுன்சலிங் வரும் 7-ம் தேதி தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகளில் அனைத்து இடங்கள் மற்றும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்கள் என சுமார் 2 லட்சம் பி.இ., பி.டெக். இடங்கள் பொது கவுன்சலிங் மூலம் ஒற்றைச் சாளர முறையில் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஒரு லட்சத்து 73 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.

இந்த கல்வியாண்டில் (2014 15) மாணவர்களை சேர்ப்பதற்கான சிறப்புப் பிரிவு கவுன்சலிங் கடந்த மாதம் 23 ம்தேதி தொடங்கியது. விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினருக்கு மூன்று நாட்கள் கவுன்சலிங் நடைபெற்றது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கவுன்சலிங் கடந்த 27 ம் தேதி தொடங்குவதாக இருந்தது. இதில் பங்கேற்க மாணவ மாணவிகளுக்கு அழைப்பும் அனுப்பப்பட்டு இருந்தது.

இந்நிலையில், புதிய பாடப்பிரிவுகள் கேட்டு அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் அனுமதிக்காக காத்து இருப்பதால், பொது கவுன்சலிங்கை நிறுத்தி வைக்க வேண்டும் எனக் கோரி தமிழகத்தில் உள்ள 10 தனியார் பொறியியல் கல்லூரிகள், வழக்குத் தொடர்ந்தன. இதையடுத்து அந்த கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்த பிறகே கவுன்சலிங்கை தொடரவேண்டும் என்று 26ம் தேதி உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.

அதனால், கடந்த 27-ம் தேதி தொடங்க இருந்த பொது கவுன்சலிங் ஒத்திவைக்கப்பட்டது. இதைப் பற்றி அறியாமல் ஏராளமான மாணவர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், பொது கவுன்சலிங் வரும் 7-ம் தேதி நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்திரியராஜ் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

உச்சநீதிமன்ற உத்தரவை யடுத்து ஒத்தி வைக்கப்பட்டிருந்த பொறியியல் சேர்க்கைக்கான பொது கவுன்சலிங், வரும் 7-ம் தேதி தொடங்குகிறது. இது குறித்து மாணவர்களுக்கு குறுஞ் செய்திகள் (எஸ்எம்எஸ்) அனுப்பப்பட்டு வருகிறது. மேலும், மாணவர்கள் பெற்ற கட் ஆப் மார்க் அடிப்படையில் அவரவர்க்கான கவுன்சலிங் நடைபெறும் தேதி, நேரம் போன்ற விவரங்கள் இணையதளத்தில் விரிவாக தெரிவிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in