

சென்னை: தமிழக அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து எடுத்துள்ள வழக்கு விசாரணைகளில் இருந்துவிலகமாட்டேன் என்றும், தலைமைநீதிபதியின் ஒப்புதல் பெற்றே இந்த வழக்குகளை விசாரிப்பதாகவும் உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் மீண்டும் திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளார்.
தமிழக நிதித்துறை அமைச்சராக தற்போது பதவி வகிக்கும் தங்கம் தென்னரசு, கடந்த 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் சொத்து குவிப்பில்ஈடுபட்டதாக தங்கம் தென்னரசு, அவருடைய மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்டலஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வுநீதிமன்றம் வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து கடந்தாண்டு டிசம்பரில் தீர்ப்பளித்தது.
தற்போது வருவாய்த் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் சாத்தூர் ராமச்சந்திரன், கடந்த 2006-2011திமுக ஆட்சிகாலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தபோது ரூ. 44.56 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக சாத்தூர் ராமச்சந்திரன், அவருடைய மனைவி ஆதிலட்சுமி பி.விசாலாட்சி மற்றும் அவருடைய நண்பர் கே.எஸ்.பி.சண்முகமூர்த்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழி்ப்புத்துறை போலீஸார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை அமர்வு நீதிமன்றம், சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட மூவரையும் விடுவித்தது.
இந்த தீர்ப்புகளை எதிர்த்து ஏற்கெனவே தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்தசென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், இதுதொடர்பாக இரு அமைச்சர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை பதில் அளிக்க உத்தரவிட்டிருந்தார்.
ஒருதலைபட்சமான மனநிலை: இந்நிலையில் இந்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சாத்தூர் ராமச்சந்திரன் தரப்பில் மூத்தவழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ ஆஜராகி, ‘‘கீழமை சிறப்பு நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை சட்டவிரோதம் என இந்த நீதிமன்றம் கூறியுள்ளதால் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான ஒருதலைபட்சமான மனநிலையில் இந்த நீதிமன்றம் உள்ளதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தாமாக முன்வந்து எடுத்த வழக்கை இந்த நீதிமன்றமே விசாரி்க்க முடியாது என்பதால் இந்த வழக்கின் விசாரணையில் இருந்து நீங்கள் விலக வேண்டும்’’ என்றார்.
அதேபோல தங்கம் தென்னரசுதரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.ரமேஷ், ‘‘நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வரப்படும் ஒரு விஷயத்தை தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்தால், அதை எந்த நீதிபதி விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்ய முடியும். நீங்களே விசாரிக்க முடியாது’’ என்றார்.
தலைமை நீதிபதி அனுமதி: இதற்கு பதில் அளித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், ‘‘அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாமாக முன்வந்து வழக்குகளை விசாரணைக்குஎடுக்கும் முன்பாக தலைமை நீதிபதியின் முன்அனுமதி பெற்றுதான் விசாரணைக்கு எடுத்துள்ளேன். எனவே இதுபோல எடுக்கப்பட்ட எந்த வழக்கு விசாரணைகளில் இருந்தும் நான் விலகமாட்டேன். வேண்டுமென்றால் நீங்கள் உச்ச நீதிமன்றத்தை நாடலாம்’’ என திட்டவட்டமாக தெரிவித்தார்.
பின்னர், சாத்தூர் ராமச்சந்திரன் மீதான வழக்கை நவ.2-க்கும், தங்கம் தென்னரசு மீதான வழக்கை நவ.9-க்கும் தள்ளிவைத்துள்ளார்.