Published : 21 Sep 2023 10:16 AM
Last Updated : 21 Sep 2023 10:16 AM
நாகப்பட்டினம்: நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு அக்டோபரில் பயணியர் கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
இதுதொடர்பான ஆய்வுக் கூட்டம் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை வகித்தார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாடு கடல்சார் வாரியம்,மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிப் போக்குவரத்துத் துறை மற்றும் வெளியுறவுத் துறை ஆகியவை இணைந்து, நாகை சிறு துறைமுகத்தில் இருந்து 60 கடல்மைல் தொலைவில் இலங்கையில் உள்ள காங்கேசன் துறைமுகத்துக்கு 150 பயணிகள் பயணிக்கும் வகையில் விரைவு பயணியர் கப்பலை இயக்குவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதில், நாகை துறைமுக கால்வாயை தூர் வாருதல், பயணியர் முனையம் அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கப்பல் போக்குவரத்து மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய கப்பல் போக்குவரத்துக் கழகம் செய்து வருகிறது.
நாகை துறைமுகத்தில் நடைபெற்று வரும் பணிகள் அக்.2-ம் தேதிக்குள் நிறைவு பெற்று, அக்டோபரிலேயே கப்பல் போக்குவரத்து தொடங்க வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில், கூடுதல் தலைமைசெயலாளர் பிரதீப் யாதவ், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத் தலைவர் மற்றும் தலைமை செயல் அலுவலர் எஸ்.நடராஜன், தாட்கோ தலைவர் உ.மதிவாணன், மீன்வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கவுதமன், எம்எல்ஏ நாகை மாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நெடுஞ்சாலை தலைமை செயற்பொறியாளர் சந்திரசேகர், மாநில துறைமுக அலுவலர் கேப்டன் ம.அன்பரசன், நாகை துறைமுக அலுவலர் கேப்டன் மானேக்ஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT