Published : 21 Sep 2023 04:00 AM
Last Updated : 21 Sep 2023 04:00 AM

பலத்த பாதுகாப்புடன் ஊர்வலம் - கோவையில் விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு

படங்கள்: ஜெ.மனோகரன்

கோவை / உதகை / உடுமலை: கோவையில் விநாயகர் சிலைகள் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 18-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, கோவையில் பல்வேறு இந்து அமைப்புகள், பொதுமக்கள் சார்பில் சாலையோர பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்தன. அதன்படி, மாநகரில் 682 விநாயகர் சிலைகளும், புறநகர் பகுதியில் 1,611 சிலைகளும் என மொத்தம் 2,293 சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன.

இவ்வாறு பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் 18-ம் தேதியில் இருந்து தினமும் தொடர்ச்சியாக கரைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவையில் சதுர்த்தி தினத்தில் இருந்து 3-வது நாளான நேற்று அதிக எண்ணிக்கையில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன.

கோவை மாநகரப் பகுதிகளில் நேற்று 384 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதில் 113 சிலைகள் குறிச்சி குளத்திலும், 43 சிலைகள் குனியமுத்தூரிலும், 49 சிலைகள் சிங்காநல்லூர் குளத்திலும், 143 சிலைகள் வெள்ளக் கிணறு நீர்நிலையிலும் கரைக்கப்பட்டன.

குறிப்பாக, நேற்று மதியம் குனியமுத்தூர் தர்மராஜா கோயில் முன்பு இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ஒன்று கூடி சிலைகளுடன் ஊர்வலமாக வந்து குனியமுத்தூர் குளத்திலும், போத்தனூர் அருகே சங்கம் வீதியில் ஒன்று கூடி சிலைகளுடன் ஊர்வலமாக வந்து குறிச்சி குளத்திலும் சிலைகளை கரைத்தனர்.

இதையொட்டி மேற்கண்ட சாலைகளில் நேற்று மதியத்துக்கு பின்னர் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில், துணை ஆணையர்கள் சந்தீஷ், சண்முகம், ராஜராஜன் மேற்பார்வையில் ஏராளமான போலீஸார் ஊர்வலப் பாதைகளிலும், சிலைகள் கரைக்கப்படும் இடங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

மேலும், சிலைகள் கரைக்கப்படும் நீர்நிலைப் பகுதிகளில் தீயணைப்பு வீரர்களும் பணியில் ஈடுபட்டனர். அதேபோல், இந்து அமைப்புகள் சார்பில் மேட்டுப்பாளையத்தில் 75, காரமடையில் 135, சிறுமுகையில் 54 சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன.

இதில் மேட்டுப்பாளையத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலைகள் சுப்பிரமணிய சுவாமி கோயில் பகுதியில் உள்ள பவானி ஆற்றுப் பகுதியிலும், காரமடையில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் வனபத்ரகாளியம்மன் கோயில் பகுதியில் உள்ள பவானி ஆற்றுப் பகுதியிலும், சிறுமுகை பகுதியில் வைக்கப்பட்ட சிலைகள் பழத்தோட்டம் பகுதியில் உள்ள பவானி ஆற்றுப் பகுதியிலும் கரைக்கப்பட்டன.

இதையொட்டி, மேற்கண்ட பகுதிகளில் மாவட்ட காவல்துறையினர் சார்பில் நேற்று போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. ஏராளமான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

அணையில் கரைப்பு: உதகையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் ஊர்வலம் தேவாங்கர் மண்டபத்தில் இருந்து தொடங்கியது. ஊர்வலத்தை பாஜக மாநில பொது செயலாளர் ஏ.பி.முருகானந்தம், பாஜக மாவட்ட தலைவர் மோகன்ராஜ், அதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி.வினோத் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இதில், இந்து முன்னணி உட்பட பல்வேறு அமைப்புகள் சார்பில் 90 சிலைகள் ஜீப், லாரிகளில் வைத்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. மேளதாளம் முழங்க வாகனங்களில் விநாயகர் சிலைகள் சேரிங்கிராஸ், கமர்சியல் சாலை, காபிஹவுஸ் ரவுண்டானா, மார்க்கெட், மெயின் பஜார், மின்வாரிய ரவுண்டானா வரை ஊர்வலம் நடந்தது.

காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புடன் உதகை அருகே காமராஜர் அணைக்கு சிலைகள் கொண்டு செல்லப்பட்டன. அங்கு விநாயகர் சிலைகள் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் படகு மூலம் அணையில் கரைக்கப்பட்டன.

உடுமலையில் ஊர்வலம்: உடுமலை நேதாஜி மைதானத்தில் இருந்து கச்சேரி வீதி வழியாக வாகனங்களில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. தளி, பொள்ளாச்சி, பழநி சாலை வழியாக சென்று மடத்துக்குளத்தில் உள்ள அமராவதி ஆற்றில் சிலைகள் கரைக்கப் பட்டன. உடுமலை டி.எஸ்.பி சுகுமார் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x