உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஷவர்மா கடைகளில் தீவிர சோதனை

உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஷவர்மா கடைகளில் தீவிர சோதனை
Updated on
1 min read

சென்னை: சென்னையில் உள்ள ஷவர்மா கடைகளில் உணவு பாதுகாப்புத் துறைஅதிகாரிகள் நேற்று தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட சிறுமி கலையரசி உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து உணவகங்களில் தரமற்ற உணவுகளை தயாரித்து விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். இதையடுத்து தமிழகம் முழுவதும்பல இடங்களில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

இதன் பகுதியாக சென்னை புரசைவாக்கம், எழும்பூர், புதுப்பேட்டை, பெரியமேடு, சென்ட்ரல் பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை நியமனஅதிகாரி சதீஷ்குமார் தலைமையில் என்.ராஜா உள்ளடங்கிய குழுவினர் நேற்று அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர். ஷவர்மாவில் உள்ள கோழிக்கறிபதப்படுத்தி பயன்படுத்தப்படுகிறதா? செயற்கை நிறங்கள் சேர்க்கப்பட்டுஇருக்கிறதா? என்பது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். தரமற்ற ஷவர்மா தயாரித்த 3 கடைகளுக்கு சீல் வைத்தனர். இதேபோல சமையல்கூடங்களும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ``கேக், இனிப்பு வகைகள், சாக்லெட் தயாரிப்புகள், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள், லாலிபாப் போன்ற 6 வகையான உணவுப் பொருட்களில் மட்டுமே வரையறுக்கப்பட்ட அளவில் நிறங்கள் சேர்க்க வேண்டும். பிற உணவுப் பொருட்களில் சேர்க்கக்கூடாது. இதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொடர்ந்து ஆய்வுகள் நடைபெறும்'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in