Published : 21 Sep 2023 06:12 AM
Last Updated : 21 Sep 2023 06:12 AM

சிட்கோ தொழிற்பேட்டை நிலத்துக்கு பட்டா பெற கிண்டியில் பிரத்யேக இ-சேவை மையம்: அமைச்சர் தா.மோ.அன்பரசன் திறந்து வைத்தார்

சென்னை: சிட்கோ தொழிற்பேட்டைகளில் நிலம் பெற்ற தொழில்முனைவோர், நிலத்தின் வகைப்பாட்டை மாற்றி பட்டா பெற, கிண்டி சிட்கோ அலுவலகத்தில் பிரத்யேக இ-சேவை மையத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேற்று திறந்து வைத்தார்.

இதுகுறித்து, சிட்கோ மேலாண்மை இயக்குநர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனத்தின் (சிட்கோ) கீழ் 130 தொழிற்பேட்டைகள் மாநிலம் முழுவதும் இயங்கி வருகின்றன. இத்தொழிற்பேட்டையில் உள்ள பெரும்பாலான நிலம் சிட்கோ பெயரில் மாற்றப்படாமல் அரசு புறம்போக்கு என்றே வருவாய் ஆவணங்களில் உள்ளது. 60 ஆண்டுகளுக்கும் மேலாக இப்பிரச்சினை தீர்க்கப்படாமல் இருந்ததன் காரணமாக, தொழில்முனைவோரால் பட்டா பெற இயலவில்லை. இதனால் தொழில்முனைவோர் தங்களது தொழிலைஅபிவிருத்தி செய்ய வங்கிகளிடமிருந்து கடன் பெறுவதில் சிரமம் இருந்து வந்தது.

இதற்கு தீர்வுகாணும் விதமாக கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் 30-ம் தேதி குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையால் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, இத்தொழிற்பேட்டைகளின் நிலங்களின் வகைபாடு அரசு புறம்போக்கு என இருந்ததை ரயத்வாரி என மாற்றம் செய்ய தலைமைச் செயலர் தலைமையின்கீழ் அதிகாரம் பெற்ற குழு அமைக்கப்பட்டது.

நிலத்தின் வகைப்பாடு மாற்றம்: இக்குழுவின் பரிந்துரையின் பேரில் தொழில் முனைவோருக்கு வழங்கப்பட்ட மனைகளுக்கு மட்டும்நிலத்தின் வகைபாடு ரயத்வாரி என மாற்றம் செய்யப்பட்டன. இதுவரை1490.46 ஏக்கர் நிலத்தின் வகைபாடு ரயத்வாரி மனை, ரயத்வாரி புஞ்சை என மாற்றம் செய்து சிட்கோ பெயரில் பட்டா பெறப்பட்டுள்ளது.

இதையடுத்து, சிட்கோ மூலம் கிரைய பத்திரம் பெற்றுள்ள தொழில் முனைவோருக்கு கடந்த மார்ச் 23-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் பட்டா வழங்கும் பணியை தொடங்கிவைத்தார். அதன்பின், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், 216 தொழில் முனைவோருக்கு பட்டாக்களை வழங்கினார்.

இதன் தொடர்ச்சியாக கிரைய பத்திரம் பெற்றுள்ள தொழிற்முனைவோர் விரைந்து பட்டா பெற வேண்டி மனு செய்ய ஏதுவாக பிரத்யேக இ-சேவை மையம் அமைச்சர் தா.மோ.அன்பரசனால் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

மேலும், கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனதொழிற்பேட்டைகளில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இதன் ஒருபகுதியாக சென்னை, கிண்டி தொழிற்பேட்டை வளாகத்தில் மரம் நடும் நிகழ்வையும் அமைச்சர் அன்பரசன் நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், தொழில் துறை செயலர் வி.அருண்ராய், தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவன மேலாண் இயக்குநர் எஸ்.மதுமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x