Published : 21 Sep 2023 06:26 AM
Last Updated : 21 Sep 2023 06:26 AM
திருவள்ளூர்: தொடர் மழையால் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னைக் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு அதிகரித்துள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கடந்த 13-ம் தேதி முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பெரும்பாலும் இரவு நேரங்களில் பெய்து வரும் இந்த மழையால், திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள சென்னை குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளின் நீர் இருப்பு அதிகரித்துள்ளது.
இதில், நேற்று முன்தினம் காலை நிலவரப்படி, பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர், மழை நீர் என விநாடிக்கு 1,030 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 3,231 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியின் நீர்இருப்பு 2,586 மில்லியன் கன அடியாக உள்ளது.
புழல் ஏரிக்கு, மழைநீர் மற்றும் இணைப்புக் கால்வாய்கள் மூலம் பூண்டி, சோழவரம் ஏரிகளில் இருந்து வரும் நீர் என விநாடிக்கு 536 கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியின் நீர் இருப்பு 2,056 மில்லியன் கனஅடியாக இருக்கிறது.
சோழவரம் ஏரிக்கு மழைநீர் மற்றும் பேபி கால்வாய் மூலம் பூண்டி ஏரியிலிருந்து வரும் நீர் என விநாடிக்கு 82 கனஅடி நீர் வருகிறது. எனவே, 1,081 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியின் நீர் இருப்பு 136 மில்லியன் கனஅடியாக உள்ளது.
மேலும் கண்ணன்கோட்டை- தேர்வாய் கண்டிகை ஏரிக்கு விநாடிக்கு 40 கனஅடி மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. ஆகவே, 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் நீர் இருப்பு 330 மில்லியன் கனஅடியாக இருக்கிறது. அதேபோல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு விநாடிக்கு 80 கனஅடி நீர் வருகிறது. இதனால் 3,645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் இருப்பு 2,665 மில்லியன் கனஅடியாக உள்ளது.
இதன்படி மொத்தமாக 11,757 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட இந்த 5 ஏரிகளில் கடந்த 12-ம் தேதி நிலவரப்படி 7,361 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. தற்போது தொடர் மழையால் நேற்றுமுன்தினம் நிலவரப்படி 7,773 மில்லியன் கனஅடியை எட்டியுள்ளது. இதனை நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT