Published : 21 Sep 2023 06:45 AM
Last Updated : 21 Sep 2023 06:45 AM
சென்னை: நிகழாண்டில் ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், இனிப்பு, காரவகைகள் உள்ளிட்டவற்றின் விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் சு.வினீத் தெரிவித்தார்.
தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில் தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் இணையம் (ஆவின்) ஈடுபட்டு வருகிறது. ஆவின் நிறுவனம் வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது.
இந்த பால் பதப்படுத்தப்பட்டு ஆரஞ்சு, பச்சை, நீல நிறப் பாக்கெட்களில் அடைத்து விற்பனை செய்யப்படுகிறது. இதுதவிர, வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்ளிட்ட 225 வகையான பொருட்கள் தமிழகம்முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாகத் தயாரிக்கப்பட்டு, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், நிகழாண்டில் ஆயுதபூஜை மற்றும் தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகள் விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் சு.வினீத் கூறியதாவது:
கடந்த ஆண்டு பண்டிகைக் காலத்தில் நெய் பாதுஷா, நட்ஸ்ஹல்வா, காஜூ பிஸ்தா ரோல், நெய்அல்வா, கருப்பட்டி அல்வா, மிக்ஸர் உள்ளிட்ட சிறப்பு இனிப்புகள், கார வகைகள் மற்றும் பால் பொருட்கள் தயாரித்து, தமிழகம் முழுவதும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், பொதுமக்கள் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்பட்டன.
இதன்மூலமாக ரூ.116 கோடி அளவுக்கு விற்பனை நடைபெற்றது. 2021-ம்ஆண்டை விடக் கடந்த ஆண்டில் விற்பனை 40 சதவீதம் அதிகரித்தது. கடந்த ஆண்டில் இடம்பெற்றிருந்த சிறப்பு இனிப்பு மற்றும் காரவகைகள் இந்த ஆண்டும் இடம்பெறும். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு விற்பனையை 20 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.
கடந்த ஆண்டில் இனிப்பு, கார வகைகளுக்கு அதிக தேவைஇருந்தது. இருப்பினும், போதியஅளவு அளிக்க முடியவில்லை.இந்த ஆண்டு வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறைவான ஆயுட்காலம் உள்ள இனிப்பு வகைகளை நீக்கிவிட்டு, ஆயுட்காலம் (குறிப்பிட்ட நாட்கள்) நீடிக்கும் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படும். இனிப்பு, கார வகைகளின் தரத்தில் அதிக கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் நெய், வெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதைப் போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றியங்களிலும் நெய் உற்பத்தியை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. வரும்பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களுக்கு நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க முயற்சி எடுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT