

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 37 பேரை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்: "மத்தியில் அமைந்த புதிய அரசு இலங்கைச் சிறைகளில் இருந்து 184 மீனவர்களை விடுவிக்க துரிதமாக நடவடிக்கை எடுத்ததற்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இலங்கைச் சிறைகளில் இருந்து மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்களது 41 படகுகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதை தங்களுக்கு எடுத்துரைக்கிறேன்.
மீனவர்கள் வாழ்வாதாரமான படகுகளை சேதப்படுத்துவதை இலங்கை கடற்படை வழக்கமாகக் கொண்டுள்ளது. நீண்ட நாட்களாக படகுகள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் அவற்றில் இயந்திரக் கோளாறு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இது தமிழக மீனவர்கள் வாழ்வாதரத்தைப் பறிக்க வேண்டும் என்றே இலங்கை அரசு மேற்கொள்ளும் சதியாகும்.
தமிழக மீனவர்களை சட்டவிரோதமாக சிறைப்பிடிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த 5-ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேரும் அவர்களது 4 விசைப்படகுகளுடன் சிறைபிடிக்கப்பட்டனர்.
பாக் ஜலசந்தியில் பாரம்பரிய முறைப்படி மீன்பிடித்து வரும் மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு வருகின்றனர். தமிழர்களின் உரிமை ஒருதலைபட்சமான ஒரு ஒப்பந்தத்தின் மூலம் தாரைவார்க்கப்பட்டிருக்கிறது. இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்பதால் மட்டுமே தமிழக மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முடியும். மேலும், அவர்கள் சுய பாதுகாப்பையும் உறுதி செய்ய முடியும். இவ்விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
எனவே, இலங்கை கடற்படையினர் அத்துமீறலை தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
அத்துடன், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட 37 மீனவர்களையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்களது தலைமையின் கீழ் மத்திய அரசு இவ்விவகாரத்தில் துரிதமாக நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.