

மதுரை: இளைஞரணியில் உழைத்தால் திமுகவில் உயர் பதவியை அடையலாம் என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
மதுரை விரகனூர் அருகே சுற்றுச்சாலையில் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்எல்ஏ, தெற்கு மாவட்ட செயலாளர் எம்.மணிமாறன் தலைமை வகித்தனர். இக்கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பேசியதாவது: இளைஞரணி 2-வது மாநில மாநாட்டை மதுரையில் நடத்த அமைச்சர் பி.மூர்த்தி விரும்பினார்.
இந்த வாய்ப்பு சேலத்துக்கு கிடைத்தது. இங்கு எழுச்சியோடு பங்கேற்றோர் சேலத்திலும் பங்கேற்று மாநாட்டை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இளைஞர்களுக்கு என தனி அணியை நாட்டிலேயே முதலில் தொடங்கியது திமுக-தான். அமைச்சர் பி.மூர்த்தி மாநாட்டு நிதியாக ரூ.1 கோடி அறிவித்துள்ளதற்கு நன்றி.
திறம்பட பணியாற்றிய பலர் கட்சிகளில் பதவி உயர்வு பெற்றுள்ளனர். உழைத்தால் முன்னேறலாம் என்பதற்கு திமுக இளைஞரணிதான் சாட்சி. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக, விரகனூர் அருகே கருணாநிதி சிலையை உதயநிதி திறந்துவைத்து 100 அடி கம்பத்தில் கட்சிக் கொடியேற்றினார்.
ஆ.வெங்கடேசன் எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ வி.வேலுச்சாமி, முன்னாள் மேயர் பெ.குழந்தை வேலு மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். முன்னதாக மதுரையில் அரசு கூர் நோக்கு இல்லம் மற்றும் ராஜாஜி மருத்துவமனை, அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு அரங்கு கட்டுமானப் பணிகள் ஆகியவற்றை உதயநிதி நேற்று ஆய்வு செய்தார்.