Published : 21 Sep 2023 04:08 AM
Last Updated : 21 Sep 2023 04:08 AM
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை நிகழ்வுகள் 25 நிமிடங்களில் முடிவடைந்து. காலவரையரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மக்கள் பிரச்சினைகளை பேச அனுமதிக்காததால் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பேரவையில் இருந்து வெளி நடப்பு செய்தனர்.
புதுச்சேரியில் கடந்த சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் மாதம் நிறைவு பெற்றது. 6 மாதங்களுக்கு ஒரு முறை பேரவையை கூட்ட வேண்டும் என்பது விதி. அதன்படி நேற்று பேரவை கூட்டப்பட்டது. திருக்குறள் உரையுடன் பேரவை நடவடிக்கைகளை பேரவைத் தலைவர் செல்வம் தொடங்கி வைத்தார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் வேங்கடசாமி, முன்னாள் எம்எல்ஏ பழனிநாதன், செவாலியே மதனக்கல்யாணி மற்றும் மொராக்கா, லிபியா நாடுகளில் நடந்த நிலநடுக்கம், புயல்பாதிப்பு பேரிடரில் உயிரிழந்த மக்களுக்கு புதுச்சேரி பேரவை இரங்கல் தெரிவித்தது. உறுப்பினர்கள் எழுந்து நின்று இரண்டு நிமிடங்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, புதுச்சேரி மாநிலத்தில் மருத்துவக் கல்வியில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கிய மத்திய அரசுக்கு, பிரதமர் மோடி, முதல்வர் ரங்கசாமி, ஆளுநர் தமிழிசைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஜி 20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளது,
சந்திரயான் விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது ஆகிய வற்றுக்கு பேரவைத் தலைவர் செல்வம் நன்றியும், பாராட்டும் தெரிவித்து வாசித்தார். இதற்கிடையில் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு தவறியது, மோசமடைந்த சட்டம் - ஒழுங்கு பிரச்சினை, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 சரியாக வழங்கவில்லை,
சமையல் எரிவாயு மானியம் இதுவரை வழங்கவில்லை இது போன்ற மக்கள் பிரச்சினைகளை பேச அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக மற்றும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எழுந்து பேசினர். இதையடுத்து மைக் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தொடர்ந்து எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் பேசியப்படி இருந்தனர். இவர்களுக்கு பேச அனுமதி வழங்காததால் பேரவையில் இருந்து திமுக, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளி நடப்பு செய்தனர்.
சிறிது நேரத்துக்குப் பின் அவைக்கு வந்த திமுக எம்எல்ஏக்கள் பேரவைத் தலைவர் இருக்கை முன்பாக சென்று முற்றுகையிட்டு, "பாராட்டு, நன்றி அறிவிப்புகள் ஆகியவற்றை அலுவல் பட்டியலில் இல்லாமல் வாசித்தது ஏன்?"என்று கேள்வி எழுப்பினர். "பாராட்டு, நன்றி அறிவிப்புகள் அலுவல் பட்டியலில் குறிப்பிட வேண்டியதில்லை" என்று பேரவைத் தலைவர் தெரிவித்தவுடன் மீண்டும் பேரவையில் இருந்து வெளியேறினர்.
தொடர்ந்து சட்டப்பேரவையில் தணிக்கை துறை தலைவரின் அறிக்கையை முதல்வர் ரங்கசாமி சமர்ப்பித்தார். தொடர்ந்து 2023-ம் ஆண்டு புதுவை எம்எல்ஏக்கள் தகுதியிழத்தலை தடுத்தல் திருத்த சட்ட முன்வரைவை அமைச்சர் லட்சுமி நாராயணனும், சரக்கு மற்றும் சேவை வரி திருத்த முன்வரைவை முதல்வர் ரங்கசாமியும் தாக்கல் செய்தனர்.
இந்த மசோதாக்கள் குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன. சுமார் 25 நிமிடங்களில் பேரவை நிகழ்வுகள் முடிவடைந்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT