Published : 21 Sep 2023 04:10 AM
Last Updated : 21 Sep 2023 04:10 AM
திருச்சி: திருச்சி மாவட்டம் மற்றும் திருச்சிமாவட்ட எல்லையையொட்டிஉள்ள சேலம், அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொண்டு வரப்பட்டவை என மொத்தம் 1,250 விநாயகர் சிலைகள், திருச்சி காவிரி ஆறு மற்றும் பல்வேறு நீர்நிலைகளில் நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை கரைக்கப்பட்டன.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருச்சி மாநகரில் 282 இடங்களிலும், புறநகரில் 919 இடங்களிலும் என மொத்தம் 1,201 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த3 நாட்களாக விநாயகர் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, விநாயகர் சதுர்த்தி மூன்றாம் நாளான நேற்று ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள், லாரி உள்ளிட்ட வாகனங்களில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டன.
இதையொட்டி, திருச்சி மாநகரில் காவல் ஆணையர் ந.காமினி தலைமையில் 1,850 போலீஸாரும், புறநகர் பகுதியில் மாவட்ட எஸ்.பி வருண் குமார் தலைமையில் 1,100 போலீஸாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். திருச்சி மாநகரை பொறுத்தவரை சிந்தாமணி - ஸ்ரீரங்கம் காவிரி ஆற்றில் வடகரை மற்றும் தென்கரையில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
புறநகர் பகுதிகளில் 27 இடங்களில் சிலைகள் கரைக்கப்பட்டன. இரவு 8 மணி நிலவரப்படி புறநகர் மாவட்டத்தில் 750 சிலைகள் கரைக்கப்பட்டன. திருச்சி மாநகரில் இரவு 7 மணிக்கு பிறகுதான் சிலை ஊர்வலங்கள் புறப்பட்டன. இது தவிர, திருச்சி மாவட்ட எல்லைப் பகுதிகளான சேலம் ஆத்தூர், அரியலூர்,பெரம்பலூர் ஆகிய பகுதிகளிலிருந்து 49 சிலைகள் கொண்டு வரப்பட்டு கரைக்கப்பட்டன.
போலீஸ் அறிக்கைப்படி 1,250 சிலைகள் கரைக்கப்பட்டதாக கூறினாலும், கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகளின் எண்ணிக்கை 1,400-க்கு மேல் இருக்கும். தவிர வீடுகளில் வைக்கப்பட்டிருந்த சிறியஅளவிலான சிலைகளை பொதுமக்கள் நீர்நிலைகளில் கரைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT