Published : 13 Dec 2017 10:03 AM
Last Updated : 13 Dec 2017 10:03 AM

டிஎன்பிஎஸ்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றவர்கள் கைது: வெளி மாநிலத்தவருக்கு பணி வாய்ப்பு வழங்க எதிர்ப்பு

வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழக அரசுப் பணியில் வாய்ப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியினர் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தமிழக அரசுப் பணியில், வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சென்னையில் அமைந்துள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகம் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களும், நிர்வாகிகளும் கோட்டை ரயில்வே நடைமேம்பாலம் அருகில் இருந்து டிஎன்பிஎஸ்சி அலுவலகம் நோக்கி பேரணியாக வந்தனர்.

பேரணி முடிவில் தி.வேல்முருகன் பேசியதாவது: தமிழக அரசுப் பணியில் வெளி மாநிலத்தினர் மற்றும் நேபாளம், திபெத் உள்ளிட்ட வெளிநாட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் வகையில் டிஎன்பிஎஸ்சி விதியை திருத்தம் செய்துள்ளது. இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. உடனடியாக இந்த அரசாணையை ரத்துசெய்ய வேண்டும்.

ஆந்திரா, தெலங்கானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் அந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசுப் பணியில் 100 சதவீதம் வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் ஏன் இந்த நிலை?

தமிழகத்தில் அமைந்துள்ள மத்திய அரசு அலுவலகங்களில் 90 சதவீத பணிகளை தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. தமிழக அரசு பணியில் சேருவதற்கான வயது உச்சவரம்பை 35-ல் இருந்து 40-ஆக உயர்த்த வேண்டும். நமது அண்டை மாநிலங்களில் எல்லாம் வயது உச்சவரம்பு 45 ஆகத்தான் உள்ளது என்றார்.

டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற வேல்முருகன் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x