மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை

மேட்டூர் அனல்மின் நிலையம் முகப்பு படம்
மேட்டூர் அனல்மின் நிலையம் முகப்பு படம்
Updated on
1 min read

மேட்டூர்: மேட்டூர் அனல்மின் நிலையத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு சொந்தமான மேட்டூர் அனல் மின் நிலையத்தில் 2 பிரிவுகள் உள்ளன. முதல் பிரிவில் தலா 210 மெகாவாட் திறன் கொண்ட அலகுகள் 4 உள்ளன. இவற்றின் மூலம் 840 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. 2-வது பிரிவில் 600 மெகாவாட் திறன் கொண்ட ஒரு அலகு மூலம் 600 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

இங்கு நிரந்தரமாகவும், ஒப்பந்த அடிப்படையிலும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிகின்றனர். இதில், சென்னையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் 850-க்கும் மேற்பட்ட பணியாளர்களை பணியில் அமர்த்தியுள்ளது. இந்நிலையில், அந்த தனியார் நிறுவனம் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக புகார் எழுந்தது. இதையடுத்து நேற்று காலை வருமான வரித்துறை அதிகாரிகள் 5 பேர் கொண்ட குழுவினர், மேட்டூர் அனல்மின் நிலைய வளாகத்தில் உள்ள அந்த தனியார் நிறுவன அலுவலகத்திலும், அனல் மின் நிலையத்திலும் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில், தனியார் நிறுவனம் மூலம் நியமிக்கப்பட்ட பணியாளர்களின் விவரங்கள், அவர்களுக்கு வழங்கப்படும் மாத சம்பளம் உள்ளிட்ட விவரங்களை அதிகாரிகள் கேட்டறிந்தனர். மேலும், அலுவலகத்தில் இருந்த ஆவணங்கள், கோப்புகளை கைப்பற்றி விசாரித்தனர். தனியார் நிறுவனம் மின் உபகரண பொருட்களை விநியோகம் செய்வதால், அனல்மின் நிலையத்துக்கு ஏதேனும் பொருட்களை விநியோகம் செய்துள்ளார்களா எனவும் அதிகாரிகள் விசாரித்தனர். காலை 7.30 மணிக்கு தொடங்கிய சோதனை மாலை 5 மணியை கடந்தும் நீடித்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in