Published : 20 Sep 2023 09:25 PM
Last Updated : 20 Sep 2023 09:25 PM
மேட்டூர்: மேட்டூர், பூலாம்பட்டி, தேவூர் காவிரி ஆற்றில் புதன்கிழமை 1,980 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இந்த நிகழ்வுகளின்போது 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
விநாயகர் சதுர்த்தி விழா கடந்த திங்கட்கிழமை (18ம் தேதி) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் பல வடிவங்களால் ஆன விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். இந்த சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது. அதன்படி, மேட்டூர் காவிரி பாலம், எம்ஜிஆர் பாலம், எடப்பாடி அருகே பூலாம்பட்டி, தேவூர் கல்வடங்கம் உள்ளிட்ட பகுதிகளில் விநாயகர் சிலை கரைக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
அதன்படி மேட்டூர், ஜலகண்டாபுரம், நங்கவள்ளி, ஓமலூர், சேலம், ஈரோடு மாவட்டத்திலிருந்தும் இருந்து வழிபாடு செய்த விநாயகர் சிலைகள் வாகளங்கள் மூலம் கொண்டு வரப்பட்டது. அதனை சிறப்பு பூஜைகள் செய்து மேட்டூர், பூலாம்பட்டி, தேவூர் பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் சென்று கரைத்தனர். அதன்படி, இன்று மேட்டூரில் 1,180 விநாயகர் சிலைகளும், பூலாம்பட்டி, தேவூரில் 800 விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன. அப்போது, போலீஸார் மற்றும் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
2 இளைஞர்கள் உயிரிழப்பு: எடப்பாடி அடுத்த குரும்பப்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாரதி (25). இவர் கோபியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். பாரதி மற்றும் அவரது நண்பர்கள் விநாயகர் சிலை கரைக்க கல்வடங்கம் அருகேயுள்ள கோம்புகாடு பகுதி காவிரி ஆற்றுக்கு வந்தனர். அப்போது, பாரதி எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார். உடலை மீட்ட தேவூர் போலீஸார், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல் சேலம் அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த வீரண் (27) என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து விநாயகர் சிலையை கரைக்க மேட்டூர் வந்தார். அப்போது அனல் மின் நிலையம் எதிரே உள்ள வெள்ள உபரி நீர் செல்லும் இடத்தில் குளிக்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்தார். இது குறித்து கருமலைக்கூடல் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT