

நாமக்கல்: கடந்த 9 ஆண்டுகளாக பாஜக மத்தியில் ஆட்சி புரிந்துவரும் நிலையில் தேர்தல் நேரத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு என்பது பாஜகவின் அரசியல் நாடகம். என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் கருத்து தெரிவித்தார்.
நாமக்கல்லில் ஆதிவாசி உரிமைகளுக்கான தேசிய அமைப்பின் 4-வது தேசிய மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்ற சிபிஎம் அரசியல் தலைமை குழு உறுப்பினர் முன்னாள் எம்பியுமான பிருந்தா காரத் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "கடந்த 9 ஆண்டுகளாக பாஜக மத்தியில் ஆட்சி புரிந்து வரும் நிலையில் தேர்தல் நேரத்தில் மகளிருக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு என்பது பாஜகவின் அரசியல் நாடகம். இந்த மசோதா நிறைவேறுவது கடினம், 2029 -ம் ஆண்டு தேர்தலின் போதும் இதே மகளிர் மசோதா தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது பாஜகவின் அரசியல் தந்திரம். இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. வருகின்ற 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் இண்டியா கூட்டணி வெற்றி பெரும். அதற்கு பின்னர் 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சிபிஐ-யின் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்து முடிவு செய்யப்படும். தமிழக அரசு வழங்கி வரும் மகளிர் உரிமைத் தொகை பெண்களின் முன்னேற்றத்துக்கு நிச்சயம் உதவும். இண்டியா கூட்டணியில் உள்ளவர்கள் சனாதனம் குறித்து பேசுவது அந்தந்த கட்சியின் நிலைப்பாடு" என்றார்.