Published : 28 Jul 2014 01:20 PM
Last Updated : 28 Jul 2014 01:20 PM

ரத்தத்தால் கோரிக்கையை எழுதி வனக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளை ரத்ததால் எழுதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம், மேட்டுப் பாளையத்தில் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. 120 மாண வர்கள், 42 மாணவிகள் வனவியல் பட்டப்படிப்பு படிக்கின்றனர்.

இந்த மாணவர்கள் வனத்துறை யில் தங்களுக்குப் பணி வழங்க வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். இதையடுத்து, வனச்சரக காலிப் பணியிடங்களை 100 சதவீதம் வனக் கல்லூரி மாணவர்களைக் கொண்டு நிரப்பப்படும் என தமிழக அரசு தெரிவித்தது.

இதன்பேரில், வனவியல் மாணவர்கள் வனச்சரகத் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வு எழுதினர். ஆனால், தேர்வு எழுதி நான்கு ஆண்டுகளாகியும் இதுவரை பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. இந்நிலையில், வனவியல் மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டை 25 சதவீதமாக குறைத்து கடந்த 11-ம் தேதி தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது.

அரசின் புதிய உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தங்களுக்கு நூறு சதவீத இடஒதுக்கீடு மீண்டும் வழங்கக் கோரியும் கடந்த 22-ம் தேதி முதல் கல்லூரி வளாகத்திலேயே மாணவர்கள் போராட்டம் மேற்கொண்டனர். இதனால் கல்லூரி மற்றும் விடுதி காலவரையின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, மாணவ, மாணவிகள் கல்லூரி விடுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர். ஆனால், அவர்கள் கல்லூரி நுழைவு வாயிலில் அமர்ந்து 5 நாள்களாக கோரிக்கையை விளக்கிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந் நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 6-ம் நாள் போராட்டத்தின்போது மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களது கட்டை விரலை ஊசியால் குத்தி அதிலிருந்து வழியும் ரத்தத்தை வெள்ளைத் துணியில் வீ நீட் ரேஞ்சர் என எழுதி தமிழக முதல்வருக்கு கோரிக்கையாக தெரிவித்தனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திற்கு கீழ் இந்த வனக்கல்லூரி வருவதால் துணைவேந்தர் பதில் அளிக்க வேண்டும் என மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x