Published : 20 Sep 2023 07:43 AM
Last Updated : 20 Sep 2023 07:43 AM
நாமக்கல்: 'சவர்மா' சாப்பிட்ட பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தனியார் ஹோட்டலுக்கு கோழி இறைச்சி விற்பனை செய்த இறைச்சிக் கடை உரிமையாளரை காவல் துறையினர் கைது செய்தனர்.
நாமக்கல் பழைய நகராட்சி அலுவலகம் அருகே ‘ஐ வின்ஸ்’ என்ற தனியார் ஹோட்டல் ஒன்றில் சவர்மா எனப்படும் கோழி இறைச்சி சாப்பிட்ட பள்ளி மாணவி கலையரசி (14) நேற்று முன்தினம் உயிரிழந்தார். மேலும், அதே ஹோட்டலில் 'சவர்மா' சாப்பிட்ட 11 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உள்பட 43 பேர் அரசு, தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவத்தையடுத்து மாவட்ட ஆட்சியர் ச.உமா உத்தரவின் பேரில் தனியார் ஹோட்டலுக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், ஹோட்டல் உரிமையாளர் நவீன்குமார், சமையலர்கள் இருவர் என மொத்தம் 3 பேர் கைது செய்யப்பட்டனர். தவிர, மாவட்டம் முழுவதும் 'சவர்மா', கிரில் சிக்கன் விற்பனை செய்யவும் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் நாமக்கல் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டாக்டர் அருண் தலைமையில் 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. உணவுப் பாதுகாப்பு அலுவலர், அந்தந்த உள்ளாட்சி அமைப்பில் உள்ள சுகாதார அலுவலர்கள் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
அவர்கள் மாவட்டம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், ஃபாஸ்ட் புட் உணவகங்கள், மீன் இறைச்சிக்கடைகள், கறிக்கோழிக்கடைகள் உள்ளிட்ட கடைகளை சோதனையிட்டனர். மொத்தம் 140 உணவகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 37 கடைகளில் சுகாதாரமற்ற முறையில் உணவு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. மொத்தம் 82.35 கிலோ உணவுபொருள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இததொடர்பாக 35 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. மேலும், ரூ. 35 ஆயிரம் அபராதமும் வசூலிக்கப்பட்டது. அந்த உணவகங்களுக்கு மாவட்ட சுகாதார அலுவலர் அருண் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
இதனிடையே மாணவி உயிரிழந்த விவகாரத்தில் தனியார் ஹோட்டலுக்கு கோழி இறைச்சி விற்பனை செய்த நாமக்கல் ராமாபுரம்புதூரைச் சேர்ந்த கோழி இறைச்சிக் கடை உரிமையாளர் சீனிவாசன் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். சுகாதாரமற்ற முறையில் இறைச்சி விற்பனை செய்ததாக உணவு பாதுகாப்புத் துறையினர் அளித்த புகாரின் பேரில் அவரை கைது செய்ததாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT