Published : 20 Sep 2023 07:47 AM
Last Updated : 20 Sep 2023 07:47 AM
கடலூர்: பண்ருட்டியில் தனியார் வசம் நீண்ட காலமாக இருந்த பல கோடி மதிப்புள்ள கோயில் இடத்தை இந்து சமய அறநிலையத் துறையினர் மீட்டனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி பேருந்து நிலையம், இந்திராகாந்தி சாலையில் உள்ள இடங்கள் மற்றும் மேலப்பாளையத்தில் உள்ள பல்வேறு இடங்கள் இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான இடங்களாகும். இதனை குருலட்சுமி அறக்கட்டளையினர் பராமரித்து வந்தனர். இதில் கிடைக்கும் வாடகை, திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயில், பண்ருட்டி ரங்கநாத பெருமாள் கோயில், மேலப்பாளையம் பெருமாள் கோயில் உற்சவங்கள் மற்றும் கோயில் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்த நிலையில் பண்ருட்டி பேருந்து நிலையம் பின்புறம் உள்ள பல கோடி மதிப்புள்ள சுமார் 2 ஏக்கர் நிலத்தில் வாகனங்களை வாடகைக்கு நிறுத்தும் நிலையம் செயல்பட்டு வந்தது. இதனை குருலட்சுமி அறக்கட்டளையினர் கணபதி என்பவருக்கு 40 ஆண்டுகள் குத்தகைக்கு விட்டிருந்தனர். கணபதி இறந்த பிறகு அவரது வாரிசுகள் அந்த இடத்தை வாடகை ஒப்பந்தத்தின் பேரில் நிர்வகித்து வந்தனர். அவர்கள் அந்த இடத்தை வேறு சிலருக்கு உள் வாடகைக்கு விட்டுள்ளனர்.
இதற்கிடையே முறையாக வாடகை பணம் செலுத்தாத காரணத்தாலும், வாடகை காலம் முடிவடைந்த காரணத்தாலும் இடத்தை காலி செய்ய இந்து சமய அறநிலையத்துறையினர் நோட்டீஸ் அளித்தனர். நோட்டீஸை பெற்றுக் கொண்ட வாடகைதாரர்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கை அறநிலையத் துறைக்கான நீதிமன்றத்தில் தீர்வு காணுமாறு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து விழுப்புரத்தில் உள்ள இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடத்தப்பட்டது. இதில், 12 நாட்களுக்குள் இடத்தை காலி செய்து, இந்து அறநிலையத் துறையிடம் ஒப்படைக்கவேண்டுமென இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் சிவக்குமார் உத்தரவிட்டார்.
இந்நிலையில் நேற்று காலை அறநிலையத் துறை கடலூர் இணை ஆணையர் பரணிதரன், கடலூர் கூடுதல் பொறுப்பு உதவி ஆணையர் முத்துராமன், அரியலூர் உதவி ஆணையர் நாகராஜன், செயல் அலுவலர்கள், ஆய்வாளர்கள் மற்றும் அறநிலையத் துறை ஊழியர்கள் கொண்ட குழுவினர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். பண்ருட்டி டிஎஸ்பி சபியுல்லா தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜதாமரை பாண்டியன், கண்ணன், நந்தகுமார் மற்றும் 300-க்கும் மேற்பட்ட போலீஸாரும் அங்கு வந்தனர்.
நீதிமன்ற உத்தரவின்படி, கோயில் நிலத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களான, பேருந்துகள், லாரிகள், கார்கள், இருசக்கர வாகனங்கள் போன்றவற்றை அப்புறப்படுத்தி, அந்த இடத்துக்கு சீல் வைத்தனர். இத்தகவல் அறிந்து இடத்தை வாடகைக்கு எடுத்த கணபதியின் வாரிசுகள் 100-க்கும் மேற்பட்டவர்களுடன் அங்கு வந்தனர். அவர்களிடம் உரிய உத்தரவைக் காட்டி அதிகாரிகள் சீல் வைத்து விட்டுச் சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT