Published : 20 Sep 2023 06:12 AM
Last Updated : 20 Sep 2023 06:12 AM
சென்னை: சொத்து குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை மற்றும் ரூ.5 லட்சம் அபராதம்விதித்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடந்த 1991-96 அதிமுக ஆட்சிக் காலத்தில் சமூக நலத்துறை அமைச்சராக பதவி வகித்த இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர் வெங்கடகிருஷ்ணன்.
இந்நிலையில் வருமானத்துக்கு அதிகமாக ரூ. 73.78 லட்சம் அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டுள்ளதாகக்கூறி வெங்கடகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி மஞ்சுளா ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்த ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி இருவரையும் விடுதலை செய்து கடந்த 2012-ம்ஆண்டு தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பாகநடந்தது. இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட வெங்கடகிருஷ்ணன் மற்றும் மஞ்சுளாஆகிய இருவரையும் விடுதலை செய்துகீழமை நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பைரத்து செய்து உத்தரவிட்டார்.
மேலும் தண்டனை விவரங்களை அறிவிக்க இருவரும் செப்.19-ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். அதன்படி வெங்கடகிருஷ்ணன், மஞ்சுளா ஆகிய இருவரும் நேற்று நேரில் ஆஜராகி தங்களுக்கு குறைந்தபட்ச தண்டனை விதிக்க கோரினர். மேலும், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதால், கீழமை நீதிமன்றத்தில் சரணடைய அவகாசம் வழங்கவும் கோரப்பட்டது.
அதையடுத்து வெங்கடகிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தும், அவரது மனைவி மஞ்சுளாவுக்கு 18 மாதங்கள் சிறை மற்றும் ரூ. 5 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும் இருவரும் கீழமை நீதிமன்றத்தில் சரணடைய அக்.25 வரை அவகாசம் வழங்கினார். சிறப்பு நீதிமன்றம் இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை எனக்கூறி விடுதலை செய்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT